திருப்பத்தூர் மாவட்டத்தில், யாருக்கும் கொரோனா அறிகுறி இல்லை - அமைச்சர் நிலோபர்கபில் பேட்டி


திருப்பத்தூர் மாவட்டத்தில், யாருக்கும் கொரோனா அறிகுறி இல்லை - அமைச்சர் நிலோபர்கபில் பேட்டி
x
தினத்தந்தி 28 March 2020 3:30 AM IST (Updated: 28 March 2020 9:21 AM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா அறிகுறி இல்லை என்று அமைச்சர் நிலோபர்கபில் தெரிவித்தார்.

வாணியம்பாடி.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அரசு மருத்துவமனை, பஸ் நிலையம் மற்றும் தமிழக ஆந்திர எல்லைப்பகுதி உள்ளிட்ட இடங்களில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர்கபில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அரசு மருத்துவமனையில் உரிய படுக்கை வசதிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் பணியில் இருப்பது குறித்தும் கொரோனோ வைரஸ் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது குறித்தும் மருத்துவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

பஸ் நிலையத்தில் நகராட்சி மற்றும் சுகாதாரத்துறை சார்பில் நகராட்சி பணியாளர்கள் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்களிடம் இருந்து கிருமி நாசினியை வாங்கி தெளிக்கும் பணியில் ஈடுபட்டார். தொடர்ந்து தமிழக ஆந்திர எல்லைப்பகுதியான வெலதிகாமணிபெண்டா பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வெளியிலிருந்து வருபவர்களை பரிசோதனை செய்தபின் அனுமதிக்குமாறு அவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அனைத்து மக்களும் வீடுகளிலேயே இருந்து தங்களை தனிமைப்படுத்தி கொள்ளவேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சர் அனைவரையும் வலியுறுத்தி வருகிறார். மக்கள் அனைவரும் அதை பின்பற்றி நடக்க வேண்டும். திருப்பத்தூர் மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா வைரஸ் அறிகுறி இல்லை. இருந்தாலும் மக்கள் நலன் கருதி சந்தேகப்படும்படி உள்ளவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்து வருகிறோம்.

வாணியம்பாடியை பொறுத்தவரை 3 பேர் வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி அங்கு அவர்கள் கண்காணிப்பில் உள்ளனர். தற்போது வரை அவர்களுக்கு கொரோனா அறிகுறி எதுவும் இல்லை. வீடுகளை விட்டு மக்கள் வந்தால் தான்பிரச்சினைகள் ஏற்படுகிறது. எனவே யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது உதவி கலெக்டர் காயத்திரி சுப்ரமணியம், தாசில்தார் சிவப்பிரகாசம், நகராட்சி ஆணையாளர் சிசில் தாமஸ், மருத்துவ அலுவலர் அம்பிகா, அ.தி.மு.க. நகர செயலாளர் சதாசிவம், அவைதலைவர் அப்துல் சுபான் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story