கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க போலீஸ் வாகனம் மூலம் கிருமி நாசினி தெளிப்பு
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க போலீஸ் வாகனம் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
கோவை,
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க கோவை மாநகராட்சி பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி சாலைகள், மக்கள் அதிகம் நடமாட்டமுள்ள பஸ் நிலையம் ஆகிய இடங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், கோவை மாநகர போலீசுக்கு சொந்தமான போலீஸ் (வருண்) வாகனம் மூலம் நேற்று கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இருந்து தொடங்கிய அந்த வாகனத்தின் முன்பும் பின்பும் கிருமிநாசினியை தண்ணீரில் கலந்து தெளித்து கொண்டே சென்றது.
இதேபோல் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம், அரசு ஆஸ்பத்திரி, ரெயில் நிலையம் முன்பு, உக்கடம் பஸ் நிலையம் என பல்வேறு பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கலவரக்காரர்களை கலைக்க பயன்படுத்தும் போலீஸ் (வருண்) வாகனம் 12 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்டது. இதில் தண்ணீர் நிரப்பப்பட்டு, அதில் பிளிச்சிங் பவுடர் கலந்து தெளிக்கப்பட்டது. இதற்காக விஷேசமாக வடிவமைக்கப்பட்ட குழாயில் சிறிய துளைகள் இடப்பட்டு கிருமிநாசினி பல இடங்களில் எளிதாக தெளிக்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story