திருப்பூர் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டை ஆய்வு செய்த அமைச்சர்
திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வார்டை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.
திருப்பூர்,
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை திருப்பூர் மாவட்டத்தில் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இதற்காக திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு உள்ளது. இதனை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார்.
இதுகுறித்து அமைச்சர் கூறியதாவது:-
15 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம் தயார் நிலையில் உள்ளது. அரசு மருத்துவமனைகளில் 15 மல்டிபேரா மானிட்டர்கள், 7 வென்டிலேட்டர்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 79 வென்டிலேட்டர்கள் என மொத்தம் 86 வென்டிலேட்டர்கள் தயார் நிலையில் உள்ளன. மாவட்டத்தின் அவினாசி, உடுமலை உள்பட அனைத்து வட்டங்களிலும் கொரோனா வார்டுகள் உருவாக்கப்பட உள்ளன.
திருப்பூரில் 6 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், இங்கிலாந்தில் இருந்து திரும்பிய திருப்பூர் தொழிலதிபருக்கு மட்டும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தற்போது கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மார்ச் 1-ந் தேதிக்கு பிறகு பல்வேறு வெளிநாடுகளில் இருந்து திருப்பூர் திரும்பிய, 1,360 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
இதில் கலெக்டர் விஜயகார்த்திகேயன், எம்.எல்.ஏ.க்கள் கரைப்புதூர் ஏ.நடராஜன், கே.என்.விஜயகுமார், முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், வருவாய் அலுவலர் ஆர்.சுகுமார், திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் வள்ளி, பொது சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் சாந்தி, துணை இயக்குனர் ஜெகதீஷ்குமார், கண்காணிப்பாளர் கோபாலகிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.
இதுபோல் கொரோனா வைரஸ் காரணமாக மாவட்டத்தில் உழவர் சந்தைகளில் பொதுமக்கள் அதிகம் கூடுவதைத் தவிர்க்கும் வகையில், திருப்பூர் வடக்கு பகுதிக்கு புதிய பஸ் நிலையத்திலும், திருப்பூர் தெற்கு பகுதிக்கு பழைய பஸ் நிலையத்திலும், மாவட்டத்தின் பிற பகுதிகளான தாராபுரம் மற்றும் உடுமலைப்பேட்டை ஆகிய பகுதிகளில் தற்காலிக காய்கறி சந்தை திறந்தவெளியில் அமைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் போதிய இடைவெளி விட்டு நின்று அனைத்து காய்கறிகளையும் பெற்றுக்கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story