தற்காலிக காய்கறி சந்தையில் கலெக்டர் ஆய்வு
திருப்பூர் பழைய பஸ் நிலைய வளாகத்தில் செயல்படும் தற்காலிக காய்கறி சந்தையை மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் நேற்று காலை ஆய்வு செய்தார். இதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
திருப்பூர்,
திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, தாராபுரம் மற்றும் உடுமலைப்பேட்டை ஆகிய பகுதிகளில் செயல்படும் உழவர் சந்தை பகுதிகளில் பொதுமக்கள் அதிகளவில் கூடுவதை தவிர்க்கும் வகையில் தற்காலிகமாக காய்கறி சந்தைகள் திறந்தவெளியில் அமைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் தென்னம்பாளையம் பகுதியில் உள்ள உழவர் சந்தையில் பொதுமக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்கும் வகையில் திருப்பூர் பழைய பஸ் நிலைய வளாகத்தில் காய்கறி சந்தை அமைக்கப்பட்டு காய்கறி விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று முன்தினம் வரை மாவட்டத்தில் 1,360 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார்கள். நேற்று யாரும் புதிதாக தனிமைப்படுத்தப்படவில்லை பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் தங்குதடையின்றி கிடைக்கும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் மருத்துவப் பொருட்களையும் பொதுமக்களின் வீடுகளுக்கு வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
மேலும், கிருமிநாசினி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் தயார் செய்யப்பட்டு வருகிறது. காய்கறிகள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story