தாராபுரம் நகராட்சி பள்ளி மைதானத்தில் காய்கறி மார்க்கெட்


தாராபுரம் நகராட்சி பள்ளி மைதானத்தில் காய்கறி மார்க்கெட்
x
தினத்தந்தி 29 March 2020 3:15 AM IST (Updated: 29 March 2020 2:40 AM IST)
t-max-icont-min-icon

தாராபுரம்-பொள்ளாச்சி ரோட்டில் உள்ள நகராட்சி பள்ளி விளையாட்டு மைதானத்தில் காய்கறி மார்க்கெட் மற்றும் உழவர் சந்தை நடைபெற்றது.

தாராபுரம், 

தாராபுரம் கடைவீதியில் உடுமலை ரோட்டில் செயல்பட்டு வந்த தினசரி காய்கறி மார்க்கெட் மற்றும் தாராபுரம் பஸ்நிலையம் அருகே செயல்பட்டு வந்த உழவர் சந்தை ஆகியவை தாராபுரம்-பொள்ளாச்சி ரோட்டில் உள்ள நகராட்சி பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

தாராபுரம் சப்-கலெக்டர் பவன்குமார், தாராபுரம் நகராட்சி ஆணையாளர் சங்கர் ஆகியோரின் உத்தரவின்படி குறிப்பிட்ட இடைவெளியில் 50-க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. பொதுமக்கள் வந்து நீண்ட வரிசையில் நின்று காய்கறிகளை வாங்கும்போது சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்காக ஒவ்வொரு கடைகளின் முன்பும் ஒரு மீட்டர் இடைவெளியில் வட்டங்கள் வரையப்பட்டு இருந்தன.

காலை 6 மணிக்கு சந்தை ஆரம்பமானது. அப்போது கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். சந்தை முன்பு நின்ற போலீசார், முகக்கவசம் அணியாமல் வந்தவர்களை சந்தையின் உள்ளே செல்ல அனுமதிக்க மறுத்தனர்.

அதுபோன்று சந்தையின் உள்பகுதியில் நின்ற போலீசார் பொதுமக்களை வட்டத்திற்குள் நின்று ஒவ்வொருவராக வரிசையில் சென்று காய்கறிகளை வாங்கி செல்ல அறிவுறுத்தினர். தாராபுரம் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளை சேர்ந்த மளிகைக்கடைக்காரர்கள், ஓட்டல் உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் வந்து தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி சென்றனர். காலை 10 மணிக்கே சந்தை முடிவடைந்தது.

Next Story