கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகளை கூடுதல் விலைக்கு விற்றால் குண்டர் சட்டம் பாயும் - குடிமை பொருள் அதிகாரிகள் எச்சரிக்கை


கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகளை கூடுதல் விலைக்கு விற்றால் குண்டர் சட்டம் பாயும் - குடிமை பொருள் அதிகாரிகள் எச்சரிக்கை
x
தினத்தந்தி 28 March 2020 10:38 PM GMT (Updated: 28 March 2020 10:38 PM GMT)

கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகளை கூடுதல் விலைக்கு விற்றால் குண்டர் சட்டம் பாயும் என்று குடிமை பொருள் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பூந்தமல்லி, 

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. தற்போதைய சூழ்நிலையை பயன்படுத்தி கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகளை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்தன.இதையடுத்து குடிமை பொருள் தடுப்பு குற்றப்புலனாய்வு துறை உதவி கமிஷனர் ஜான்சுந்தர் தலைமையிலான அதிகாரிகள் நேற்று கோயம்பேடு மார்க்கெட்டில் ஒவ்வொரு கடையாக சோதனை மேற்கொண்டனர். அங்கு காய்கறிகள் என்ன விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது? என்பதை கேட்டறிந்த அதிகாரிகள், கூடுதல் விலைக்கு விற்கக்கூடாது என்று வியாபாரிகளிடம் தெரிவித்தனர்.

இதுகுறித்து உதவி கமிஷனர் ஜான்சுந்தர் கூறும்போது, ‘கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் அதிக விலைக்கு விற்பனை செய்வதாக தகவல் வந்தது. இதனால் இந்த திடீர் சோதனையில் ஈடுபட்டோம். ஆனால் வியாபாரிகள் அதிக விலைக்கு விற்பனை செய்யவில்லை.

தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இதுபோன்ற சூழலில் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாயும் என அரசு எச்சரித்து உள்ளது’ என்றார்.

Next Story