சமூக இடைவெளியை கடைபிடிக்காத மருந்து கடைக்கு சீல் - கலெக்டர் உத்தரவு
சமூக இடைவெளியை கடைபிடிக்கப்படாததால் தங்கச்சிமடத்தில் உள்ள ஒரு மருந்துகடைக்கு சீல் வைக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
ராமேசுவரம்,
கொரோனா தடுப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்காக கலெக்டர் வீரராகவராவ் நேற்று ராமேசுவரம் வந்தார். அப்போது கோவில் மேற்கு கோபுரவாசல், ரத வீதிகள் உள்பட அனைத்து கடைகளிலும் தீயணைப்பு துறை வாகனம் மூலம் கிருமிநாசினி மருந்து தெளிக்கும் பணிகளையும், ராமேசுவரம் நகர் பகுதி முழுவதும் கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது தாசில்தார் அப்துல்ஜபார், போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ், நகராட்சி ஆணையாளர் ராமர் உள்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.
அப்போது கலெக்டர் கூறியதாவது:- அத்தியாவசிய கடைகளில் மக்கள் குறிப்பிட்ட இடைவெளியில் நின்றே பொருட்களை வாங்கி செல்ல வேண்டும். அது போன்று விதிமுறைகளை கடைபிடிக்கப்படாத கடைகளுக்கு சீல் வைக்கப்படும்.
மாவட்டம் முழுவதும் பல ஊர்களில் இருந்து வெளிநாடுகளில் வேலை செய்து வந்தவர்கள், சொந்த ஊருக்கு திரும்பி உள்ளனர். அவர்கள் 3 ஆயிரத்து 333 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அது போல் கர்நாடகா மாநிலத்தில் மீன்பிடி தொழிலுக்கு சென்று தங்கியிருந்த 750 மீனவர்கள் ராமநாதபுரம் திரும்பியுள்ளனர்.
அந்த மீனவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். பாம்பனில் உள்ள மக்களின் வசதிக்காக மீன் மார்க்கெட் மற்றும் காய்கறி மார்க்கெட் ஆகியவை அக்காள்மடம் அருகே உள்ள சர்வீஸ் சாலையில் வருகிற 14-ந் தேதி வரை செயல்படும். ராமேசுவரத்திலும் காய்கறி மற்றும் மீன் மார்க்கெட்டுகள் மக்கள் நெருக்கடி இல்லாமல் வாங்கும் வகையில் இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. அதுகுறித்து வருவாய்த்துறை மூலம் இடம் ஒதுக்கப்பட்டு முறையாக அறிவிப்பு வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக கலெக்டர் தங்கச்சிமடம், பாம்பன் பகுதிகளிலும் ஆய்வு செய்தார். அப்போது தங்கச்சிமடத்தில் உள்ள மருந்து கடை ஒன்றில் சமூக இடைவெளி இல்லாமல் பலர் கூட்டமாக மருந்து பொருட்களை வாங்க நின்றிருந்தனர். இதைப்பார்த்த கலெக்டர் அந்த மருந்து கடைக்கு சீல் வைக்க உத்தரவிட்டார். தொடர்ந்து அந்த மருந்து கடைக்கு தாசில்தார் அப்துல்ஜபார் சீல் வைத்தார். ஆய்வின் போது தங்கச்சிமடம் ஊராட்சி மன்ற தலைவர் குயின்மேரி, ஊராட்சி எழுத்தர் கதிரேசன், பாம்பன் ஊராட்சி மன்ற தலைவர் அகிலா பேட்ரிக், ஊராட்சி எழுத்தர் விசுவநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story