சிவகங்கை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு மீறல்; வாகனங்கள் பறிமுதல்


சிவகங்கை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு மீறல்; வாகனங்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 28 March 2020 10:00 PM GMT (Updated: 28 March 2020 11:19 PM GMT)

சிவகங்கை மாவட்டத்தில் 144 தடையை மீறி தெருக்களில் சுற்றித் திரியும் இளைஞர்களின் மீது வழக்கு பதிவு செய்து, அவர்களின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர்.

சிவகங்கை, 

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதையொட்டி பொதுமக்கள் வெளியில் நடமாட தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதற்காக 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசின் இந்த உத்தரவை மதிக்காமல் இளைஞர்கள் பலர் தொடர்ந்து வாகனங்களில் தெருக்களில் சுற்றி திரிகின்றனர். இதற்காக போலீசார் பலமுறை அவர்களுக்கு அறிவுரை சொல்லி அனுப்பியும் மீண்டும் அவர்கள் வாகனங்களில் சுற்றி வருகின்றனர்.

இதனால் தற்போது போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர். நேற்று சிவகங்கை மாவட்டத்தில் ஒரே நாளில் தெருக்களில் சுற்றியதாக 96 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அத்துடன் 2 கார்கள், ஒரு ஆட்டோ உள்பட 88 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல பாகனேரியில் மதகுபட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரஞ்சித் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது தடை உத்தரவை மீறி 3 இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்த வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர். இதையடுத்து போலீசார் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

Next Story