குடும்பத்துடன் கட்டிட வேலைக்கு சென்று கேரள மாநிலத்தில் தவிக்கும் 300 தொழிலாளர்கள் - வாடகை வீட்டில் சாப்பாட்டுக்கு பணமின்றி அவதி
திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து குடும்பத்துடன் கட்டிட வேலைக்கு சென்ற 300 தொழிலாளர்கள் கேரள மாநிலத்தில் சாப்பாட்டுக்கு பணமின்றி தவிக்கின்றனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டத்தில் வேடசந்தூர், எரியோடு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த கட்டிட தொழிலாளர்கள் குடும்பத்துடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேரளாவுக்கு கட்டிட வேலைக்கு சென்றனர். இவர்கள், எர்ணாகுளம் அருகேயுள்ள பெருமானூர் தேவரை பகுதியில் கட்டிட வேலை செய்தனர். இதற்காக அங்கு வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருக்கின்றனர். பெண்கள் உள்பட 300 பேர், அங்கு தங்கி இருந்து கட்டிட வேலை செய்தனர். இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அடுத்த மாதம் (ஏப்ரல்) 14-ந்தேதி வரை நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் அவர்கள் கடந்த 22-ந்தேதி முதல் வேலைக்கு செல்ல முடியவில்லை. மேலும் மாநில எல்லைகள் மூடப்பட்டு விட்டதால், கேரளாவில் இருந்து தமிழகத்துக்கும் திரும்பி வரமுடியவில்லை. இதனால் கடந்த ஒரு வாரமாக வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர். மேலும் கையில் இருந்த பணம் முழுவதும் செலவாகி விட்டதால், சாப்பாட்டுக்கு சிரமப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதுகுறித்து கேரளாவில் குடும்பத்துடன் தவிக்கும் கட்டிட தொழிலாளியான செட்டியபட்டியை சேர்ந்த வைரவன், செல்போன் மூலம் தினத்தந்தி நிருபரிடம்கூறியதாவது:-
திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த தொழிலாளர்கள் கட்டிட வேலைக்காக கேரளாவுக்கு வந்துள்ளோம். 144 தடை உத்தரவு காரணமாக வேலைக்கும் செல்ல முடியாமல், சொந்த ஊருக்கும் திரும்ப முடியாமல் தவிக்கிறோம். மேலும் சாப்பாட்டுக்கும் பணமின்றி சிரமப்படுகிறோம். எங்களுக்கு கேரள மற்றும் தமிழ்நாடு மாநில அரசுகள் உதவ வேண்டும். எங்களை முழுமையாக பரிசோதனை செய்து சொந்த ஊருக்கு அனுப்ப வேண்டும், என்றார்.
இதேபோல் செந்துறை பகுதியை சேர்ந்த ராமசாமி, செங்கோல், பாண்டியன், ஜேம்ஸ், அருளானந்தம், செல்வராஜ் உள்பட 8 பேர் கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் தவித்து வருகின்றனர். அவர்களை மீட்க வேண்டும் என்று அவர்களது உறவினர்கள், திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்துக்கும், தமிழக அரசுக்கும் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story