அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகளில் கொரோனா ஆய்வுக்கூடம் அமைக்க வேண்டும் - எச்.வசந்தகுமார் எம்.பி. வலியுறுத்தல்


அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகளில் கொரோனா ஆய்வுக்கூடம் அமைக்க வேண்டும் - எச்.வசந்தகுமார் எம்.பி. வலியுறுத்தல்
x
தினத்தந்தி 29 March 2020 3:30 AM IST (Updated: 29 March 2020 9:36 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று நோயை கண்டறிய அரசு மற்றும் தனியார் மருத்துவகல்லூரிகளில் ஆய்வுக்கூடம் அமைக்க வேண்டும் என எச்.வசந்தகுமார் எம்.பி. வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிருப்பதாவது:-

நாகர்கோவில்,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட 3 பேர் ஒரே நாளில் பல்வேறு உடல் பிரச்சினை காரணமாக உயிரிழந்து உள்ளனர். இந்த நிலையில் மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதை கண்டறியும் ஆய்வுக்கூடம் அமைத்து தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குமரி மாவட்டம் கடையால் பகுதியில் இருந்து ஐதராபாத்துக்கு சென்ற 12 பேர் அங்கு சிக்கி தவிப்பதால், அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் தங்குமிடம் வழங்கி, தமிழ்நாட்டிற்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்க ஆந்திர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு தேன் எடுக்க சென்ற தொழிலாளர்கள், அங்கு பல்வேறு பகுதிகளில் சிக்கி தவிக்கின்றனர். தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்து அவர்களுக்கு தேவையான ரேஷன் பொருட்கள் மற்றும் நிதி உதவி வழங்க வேண்டும் என கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது. மேலும் அவர்களுக்கு தேவையான உணவு பொருட்கள் வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு எச்.வசந்தகுமார் எம்.பி. கூறி உள்ளார்.

Next Story