அடுத்த 14 நாட்கள் அபாய காலக்கட்டம் பொதுமக்கள் தனிமைப்படுத்த கலெக்டர் வேண்டுகோள்
அடுத்த 14 நாட்கள் அபாய காலக்கட்டம் என்பதால் பொதுமக்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்று கலெக்டர் சி.கதிரவன் வேண்டுகோள் விடுத்து உள்ளார். ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
ஈரோடு,
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஈரோடு மாவட்டத்தில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே நேதாஜி காய்கறி மார்க்கெட், உழவர் சந்தைகள் விசாலமான பகுதிகளில் செயல்படும் வகையில் இடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன. இந்தநிலையில் ஸ்டோனி பாலம் அருகே உள்ள மீன் மார்க்கெட் இடமாற்றம் செய்ய மாநகராட்சி ஆணையாளர் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சில இடங்களில் காய்கறிகள் அதிக விலைக்கு விற்பனை செய்வதாக புகார்கள் வந்து உள்ளன. அதன் தொடர்ச்சியாக கூட்டுறவு சங்கத்தின் சிந்தாமணி விற்பனை அங்காடி மூலம் பசுமை அங்காடிகள் பல இடங்களில் நிறுவப்பட உள்ளது. மக்கள் ஆங்காங்கே வாங்கிக்கொள்ளலாம். மளிகை பொருட்களும் தடங்கல் இன்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
அடுத்த 14 நாட்கள் மிகவும் முக்கியமான அபாய காலக்கட்டம். நோய் தொற்று மிக வேகமாக பரவும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்கள் எங்கேயும் செல்ல வேண்டாம். தனிமையில் இருப்பதை கடைபிடியுங்கள். அருகில் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள், வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் இருந்தால் தகவல் தெரிவியுங்கள். மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலக்கட்டம் இது. சாதாரண சளி, காய்ச்சல் வந்தால் அச்சப்பட வேண்டியது இல்லை. கொரோனா தொற்று இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டால், ரத்த மாதிரி எடுத்து பரிசோதனைக்காக அனுப்பப்படும். இவ்வாறு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் கூறினார்.
Related Tags :
Next Story