தீவாக மாறிய மாஞ்சோலை - அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் குடும்பத்துடன் தொழிலாளர்கள் தவிப்பு


தீவாக மாறிய மாஞ்சோலை - அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் குடும்பத்துடன் தொழிலாளர்கள் தவிப்பு
x
தினத்தந்தி 29 March 2020 11:15 PM GMT (Updated: 29 March 2020 7:33 PM GMT)

ஊரடங்கு உத்தரவால் மாஞ்சோலை தீவாக மாறி உள்ளது. அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் தவித்து வருகிறார்கள்.

நெல்லை, 

சீனாவில் தோன்றி உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசை தடுக்கும் வகையில் இந்தியாவில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு கட்டமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே அவர்கள் வெளியில் நடமாட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

இந்த ஊரடங்கு காரணமாக பல்வேறு இடங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளதால் பல பகுதிகள் தீவுகளாக மாறி விட்டன. அங்கு வசிக்கும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் மாஞ்சோலை தனித்தீவு போல மாறி உள்ளது.

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை தேயிலை தோட்டம் அமைந்துள்ளது. இங்கு தொழிலாளர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் என மொத்தம் 2,500 பேர் வசித்து வருகின்றனர்.

தற்போது கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் மாஞ்சோலை பகுதி தனித்தீவு போல் மாறி விட்டது. இங்கு தினமும் காலை, மாலையில் அரசு பஸ் சென்று வந்தது. ஆனால் ஊரடங்கு உத்தரவால் பஸ் நிறுத்தப்பட்டு விட்டது. மேலும் தனியார் வாகனங்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இதனால் இங்குள்ள மக்களுக்கு அம்பை, நெல்லையில் இருந்து காய்கறிகள், மளிகை பொருட்கள் கொண்டு செல்ல முடியவில்லை. அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் தங்கள் குடுபத்தினருடன் தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர்.

இதை அறிந்த அம்பை வருவாய் துறை அதிகாரிகள் மாஞ்சோலை பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர். தேயிலை தோட்ட நிர்வாகத்துக்கு சொந்தமான லாரிகளில் இன்று (திங்கட்கிழமை) அம்பைக்கு சென்று காய்கறி, மளிகை பொருட்கள் வாங்கி வருவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள், தோட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் அரசு டாக்டர்கள் மூலம் தொழிலாளர்கள் குடும்பத்தினருக்கு மருத்துவ பரிசோதனை, மருத்துவ உதவி கிடைக்கவும் ஏற்பாடு செய்வதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் அங்குள்ள தொழிலாளர்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.

Next Story