ஏழை, எளியோர், ஆதரவற்றோருக்கு இலவச உணவு - அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தகவல்
ஏழை, எளியோர் மற்றும் ஆதரவற்றோருக்கு இலவச உணவு வழங்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்.
விருதுநகர்,
மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கை குறித்து அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் கலெக்டர் கண்ணன் முன்னிலையில் ஆய்வு கூட்டம் விருதுநகரில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் ராஜவர்மன், சந்திரபிரபா மற்றும் முக்கிய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்துக்கு பின்னர் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்ததாவது:-
மாவட்டத்திலுள்ள 10 தாலுகாக்களிலும் தாசில்தார், பஞ்சாயத்து யூனியன் ஆணையர், யூனியன் தலைவர், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள், வட்டார மருத்துவ அலுவலர், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் மற்றும் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆகியோரை கொண்டு 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் 10 துணை கலெக்டர் அந்தஸ்தில் உள்ள கண்காணிப்பு அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மாவட்டம் முழுவதும் நகராட்சி, பேரூராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, உள்ளாட்சி துறை, போலீசார், தீயணைப்பு துறை மூலமாக அனைத்து பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தூய்மை பணி தொடர்ந்து நடந்து வருகிறது. வெளிநாடு மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சுகாதார துறையினரால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
மாவட்டத்தில் 16 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் நடமாட்டம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், வீடற்றவர்கள் மற்றும் ஏழை, எளியோருக்கு பசியாற உணவு கிடைக்கும் வகையில் சமுதாய கூடங்களில் இலவச உணவு வழங்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த மாவட்ட மக்கள் அரசு எடுக்கும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story