மூதாட்டிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு: பொழிச்சலூர் பகுதிக்கு வெளியாட்கள் செல்ல வேண்டாம் - செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்


மூதாட்டிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு: பொழிச்சலூர் பகுதிக்கு வெளியாட்கள் செல்ல வேண்டாம் - செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 30 March 2020 4:00 AM IST (Updated: 30 March 2020 1:55 AM IST)
t-max-icont-min-icon

சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூரில் மூதாட்டி ஒருவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளதால், அந்த பகுதிக்கு வெளியாட்கள் யாரும் செல்ல வேண்டாம் என செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தாம்பரம், 

சென்னையை அடுத்த தாம்பரம் வருவாய் கோட்டத்தில் எடுக்கப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் ஆய்வு செய்தார். தாம்பரம் காந்தி சாலையில் உள்ள பள்ளியில் செயல்பட்டு வரும் திறந்தவெளி காய்கறி கடைகளையும் அவர் நேரில் பார்வையிட்டார்.

பின்னர் மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் கூறியதாவது:-

பொழிச்சலூர் பகுதியில் ஒரு மூதாட்டிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதற்காக அந்த பகுதியில் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. அந்த பகுதி பாதுகாக்கப்பட்டு, அங்குள்ள அனைத்து மக்களுக்கு தினசரி மருத்துவ சோதனை நடைபெறும். அந்த பகுதிகளுக்கு பொதுமக்கள் யாரும் தேவையில்லாமல் செல்ல வேண்டாம். இப்போது அங்குள்ள மக்களை தனி குழு அமைத்து கண்காணித்து வருகிறோம். வெளியாட்கள் யாராவது பொழிச்சலூர் பகுதிக்கு சென்று வெளியே போனார்கள் என்றால் அவர்களை கண்காணிக்க முடியாது.

ஆகையால் வெளியாட்கள் யாரும் பொழிச்சலூர் பகுதிக்கு செல்ல வேண்டாம். பொழிச்சலூர் பகுதியை தொடர்ந்து கண்காணித்து யாருக்காவது கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருந்தால் உடனடி நடவடிக்கை எடுத்து தேவைப்பட்டால் மேல் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைப்போம். அந்த மூதாட்டிக்கு சிகிச்சை அளித்த டாக்டர், அந்த ஆஸ்பத்திரியில் வேலை பார்த்த அனைவரின் விவரமும் உள்ளது. அதன் அடிப்படையில் அவர்களை தனிமையில் வைக்கப்போகிறோம். அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

பாதிக்கப்பட்ட மூதாட்டி கடந்த வாரம் தேவாலயம் சென்று வந்ததாக தகவல் வந்தது. அந்த தேவாலயத்தில் உள்ள 40 பேரையும் தனிமைப்படுத்தும் பட்டியலில் சேர்த்து உள்ளோம். அவர்களுக்கு ஏதாவது அறிகுறி இருந்தால் உடனடியாக டாக்டர்கள், மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தால் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக பரிசோதித்து தொடர் சிகிச்சைக்கான நடவடிக்கையை எடுப்போம். அந்த மூதாட்டியுடன் இருந்தவர்கள் அனைவரும் சுய தனிமைப்படுத்தல் பண்ணுதல் நல்லது. அவர்களது வீட்டில் தனிமைப்படுத்தல் அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டுவது குறித்தும் பரிசீலித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அவருடன் தாம்பரம் ஆர்.டி.ஓ. ராஜ்குமார், நகராட்சி கமிஷனர் கருப்பையாராஜா ஆகியோர் இருந்தனர்.

Next Story