சரக்கு வாகனங்களுக்கான போக்குவரத்து அனுமதி அட்டையை மாநகராட்சி அலுவலகங்களில் பெறலாம் - சென்னை மாநகராட்சி கமிஷனர் தகவல்
அத்தியாவசிய தேவைகளுக்காக செயல்பாட்டில் உள்ள தொழிற்சாலைகள், அதன் பணியாளர்கள் மற்றும் சரக்கு வாகனங்களுக்கான போக்குவரத்து அனுமதி அட்டையை மாநகராட்சி அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை,
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
அத்தியாவசிய தேவைகளுக்காக இயங்கும் மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றின் உற்பத்தி மற்றும் தேவையான மூலப்பொருட்களின் உற்பத்தியை மேற்கொள்ளும் தொழிற்சாலைகள் மற்றும் தொடர்ச்சியாக செயல்பாட்டில் இருப்பது இன்றியமையாதது என்ற நிலையிலுள்ள தொழிற்சாலைகள் சரக்கு வாகனங்களின் போக்குவரத்துக்கான அனுமதி அட்டைகளை பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம்.
இதேபோல் நிலக்கரி, கனிமங்கள் ஆகியவற்றின் உற்பத்தி, போக்குவரத்துக்கு தேவையான பொருட்களின் உற்பத்தி, உணவுப் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், சாலை வழியே மாநிலங்களுக்கு இடையேயும், கப்பல்கள், விமானங்கள் மற்றும் ரெயில்வே மூலமாகவும் மேற்கொள்ளப்படும் இன்றியமையாத பொருட்களின் சரக்கு போக்குவரத்துக்கான அனுமதி அட்டைகளை மாநகராட்சியின் கீழ்கண்ட அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம். அதன் விவரம் வருமாறு:-
சென்னையில் பணியாளர்கள் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கான அனுமதி அட்டைகளை பெறுவதற்கு, பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் உள்ள துணை கமிஷனர்(பணிகள்) அலுவலகத்திலும், பழைய வண்ணாரப்பேட்டை பேசின் பாலம் சாலையில் அமைந்துள்ள வட்டார துணை கமிஷனர்(வடக்கு) அலுவலகத்திலும் பெற்றுக்கொள்ளலாம்.மேலும் செனாய் நகர் புல்லா அவென்யூ 2-வது குறுக்குத்தெருவில் அமைந்துள்ள வட்டார துணை கமிஷனர்(மத்தியம்) அலுவலகத்திலும், அடையாறு டாக்டர் முத்துலட்சுமி சாலையில் அமைந்துள்ள வட்டார துணை கமிஷனர்(தெற்கு) அலுவலகத்திலும் சரக்கு போக்குவரத்துக்கான அனுமதி அட்டையை பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story