திருமங்கலம் அருகே கள்ளக்காதலனுடன் வாழ்ந்த பெண் வெட்டிக் கொலை - தம்பி வெறிச்செயல்
திருமங்கலம் அருகே கள்ளக்காதலனுடன் வாழ்ந்த பெண்ணை வெட்டிக் கொலை செய்த தம்பியை போலீசார் கைது செய்தனர்.
திருமங்கலம்,
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே சிந்துபட்டி பக்கம் உள்ள பெரிய வாகைக்குளத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 40). இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் செல்விக் கும், அதே ஊரைச் சேர்ந்த முருகன் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
இந்த நிலையில் செல்வி குழந்தைகளை தவிக்க விட்டுவிட்டு வீட்டை விட்டு வெளியேறி திருப்பூரில் முருகனுடன் சில ஆண்டுகளாக குடும்பம் நடத்தி வந்தார். அவர்கள் அங்கு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர். இதனிடையே கொரோனா வைரஸ் பரவல் எதிரொலியாக அங்கு வேலை பார்த்த அனைவரும் சொந்த ஊருக்கு திரும்பி விட்டனர்.
அதன்படி முருகனும், செல்வியும் நேற்று முன் தினம் வாகைக்குளம் வந்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாலையில் முருகனின் வீட்டுக்குள் புகுந்த சிலர் செல்வியையும், முருகனையும் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடி விட்டனர். பலத்த காயம் அடைந்த அவர்கள் இருவரும் திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ஆனால் வழியிலேயே செல்வி இறந்தார். பலத்த வெட்டுக் காயங்களுடன் முருகன் திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். சப்-இன்ஸ்பெக்டர் முருகவேல்ராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்தனர். இதில் செல்வியின் சித்தி மகன் அருண் தனது உறவினர்கள் சிலருடன் சேர்ந்து செல்வியை வெட்டிக் கொலை செய்தது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து அருணை கைது செய்த போலீசார் மேலும் 2 பேரை தேடி வருகின்றனர். கள்ளக்காதலனுடன் ஓடிய அக்காளை 8 ஆண்டுகளுக்குப் பின்னர் நேரம் பார்த்து தம்பி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story