அத்தியாவசிய பொருட்களை உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனங்களின் சரக்கு வாகனங்களுக்கு அனுமதி - சிவகங்கை கலெக்டர் தகவல்


அத்தியாவசிய பொருட்களை உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனங்களின் சரக்கு வாகனங்களுக்கு அனுமதி - சிவகங்கை கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 29 March 2020 10:30 PM GMT (Updated: 2020-03-30T05:27:43+05:30)

மருத்துவ உபகரணங்கள், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனங்களின் சரக்கு வாகனங்களுக்கு அனுமதி பெறலாம் என சிவகங்கை மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

சிவகங்கை,

கொரோனா வைரஸ் நோய் பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் தொழில் நிறுவனங்கள் தவிர பிற தொழில் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

மேலும் மருந்து, மருத்துவ உபகரணங்கள் மற்றும் அவற்றுக்கு தேவையான மூலப்பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், உணவுப் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனங்கள், உணவு, மருந்து பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு தேவையான பண்டல்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில் இருந்து சரக்குகளை கொண்டு செல்ல வாகனங்களுக்கு அனுமதி வழங்குதல் ஆகிய பணிகளை மேற்கொள்ள மாநில அளவிலான சிறப்பு பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கு அனுமதி வழங்க மாவட்ட அளவிலான உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எனவே, சிவகங்கை மாவட்டத்தில், மருத்துவ உபகரணங்கள், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய உற்பத்தி பணிகளை மேற்கொள்ளும் தொழில் நிறுவனங்கள் சரக்கு வாகன செயல்பாட்டிற்கான அனுமதியை கலெக்டரின் நேர்முக உதவியாளர் அல்லது சிவகங்கையில் உள்ள மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் அலுவலகத்தில் அனுமதி பெறலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதையடுத்து காரைக்குடியில் கலெக்டர் ஜெயகாந்தனிடம், ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி சொக்கலிங்கம் கொரோனா தடுப்பு நடவடிக் கைக்காக ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் நிதியை காசோலை யாக வழங்கினார்.

Next Story