கொரோனா வைரஸ் பாதிப்பு: ரேஷன் பொருட்களை வீடுகளுக்கு சென்று வழங்குவது குறித்து ஆலோசித்து முடிவு - அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு பின் எடியூரப்பா பேட்டி


கொரோனா வைரஸ் பாதிப்பு: ரேஷன் பொருட்களை வீடுகளுக்கு சென்று வழங்குவது குறித்து ஆலோசித்து முடிவு - அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு பின் எடியூரப்பா பேட்டி
x
தினத்தந்தி 30 March 2020 5:55 AM IST (Updated: 30 March 2020 5:55 AM IST)
t-max-icont-min-icon

ரேஷன் பொருட்களை வீடுகளுக்கு சென்று வழங்குவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. மாநிலத்தில் இதுவரை 80 பேர் அந்த வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த கொரோனாவை தடுக்க கர்நாடக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கர்நாடகம் உள்பட நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களும் முடக்கப்பட்டு உள்ளன.

மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் கூட கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸ் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் கர்நாடகம் 3-வது இடத்தில் உள்ளது. இது மக்களிடையே நிலவி வரும் பீதியை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் முதல்-மந்திரி எடியூரப்பா, நேற்று முன்தினம் கொரோனாவை தடுப்பது குறித்து அனைத்துக்கட்சி கூட்டம் 30-ந் தேதி (அதாவது நேற்று) நடைபெறும் என்று அறிவித்தார். அதன்படி கர்நாடக அனைத்துக்கட்சி கூட்டம் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் பெங்களூரு விதான சவுதாவில் உள்ள மாநாட்டு அரங்கத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண், சுகாதாரத்துறை மந்திரி ஸ்ரீராமுலு, மருத்துவ கல்வி மந்திரி சுதாகர், போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்த ராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், ஜனதா தளம்(எஸ்) கட்சி தலைவர் குமாரசாமி, தலைமை செயலாளர் விஜயபாஸ்கர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கொரோனா வைரசை தடுப்பது குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து எடியூரப்பா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

எனது தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் கொரோனாவை தடுப்பது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. கொரோனா வைரசை தடுக்க எதிர்க்கட்சி தலைவர்கள் சில ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் கூறியுள்ளனர். அவற்றை அமல்படுத்த முடிவு செய்துள்ளோம்.

அந்த வைரசை தடுக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்த அவர்கள், இந்த கடினமான தருணத்தில் அரசுடன் கைகோர்த்து செயல்படுவதாக கூறியுள்ளனர். கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு முக கவசங்கள், முழு உடல் பாதுகாப்பு கவச உடைகள், சானிடைசர் திரவம் உள்ளிட்ட பொருட்களை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

மாவட்டம் மற்றும் தாலுகா அளவில் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படும். பிற மாநிலங்களில் இருந்து கன்னடர்கள் கர்நாடகம் வருகிறார்கள். அவர்கள் மாநில எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு உரிய மருத்துவ சோதனை நடத்தப்பட்டு மாநிலத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். மாவட்டம் மற்றும் தாலுகா ஆஸ்பத்திரிகளுக்கு தேவையான கொரோனா பரிசோதனை கருவிகள் வழங்கப்படும். விவசாயிகளின் விளைபொருட்கள், விற்பனை செய்ய தேவையான வசதி ஏற்படுத்தி கொடுக்கப்படும்.

விவசாயிகளுக்கு விதைகள், உரம், கிருமிநாசினி மருந்துகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ரேஷன் பொருட்களை பயனாளிகளின் வீடு களுக்கு சென்று வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் ஆலோசனை கூறியுள்ளார். இதுகுறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். முஸ்லிம் மக்கள் தங்களின் வீடுகளிலேயே பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று கூறினேன். இதை அவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். இதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

Next Story