தஞ்சையில், இறைச்சி, மீன் கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம் - விலை அதிகரிப்பு
தஞ்சையில் இறைச்சி, மீன் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. ஆட்டிறைச்சி, மீன்கள் விலை அதிகரித்தது.
தஞ்சாவூர்,
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அடுத்த மாதம்(ஏப்ரல்) 14-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. இந்த நாட்களில் மளிகைக்கடை, மருந்துக்கடை, இறைச்சி கடை, பால் விற்பனை நிலையம் ஆகியவை வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தினமும் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக மக்கள், கடைகளுக்கு படையெடுத்து வருகின்றனர். அவர்களை கட்டுப்படுத்த போலீசார் எவ்வளவு நடவடிக்கை மேற்கொண்டாலும் அதையும் மீறி கடைக்கு செல்வதாக கூறிவிட்டு பலர் இருசக்கர வாகனங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.
இதனால் கடைகள் திறப்பதற்கு நேர கட்டுப்பாட்டை தமிழக அரசு அறிவித்தது. அதன்படி நேற்று காலை 6 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை கடைகள் திறக்கப்பட்டு இருந்தன. மற்ற நாட்களில் இறைச்சி கடைகளில் கூட்டம் அதிகமாக இல்லை. ஆனால் ஞாயிற்றுக்கிழமையான நேற்று தஞ்சை மாநகரில் உள்ள இறைச்சி கடைகளில் கூட்டம் அலைமோதியது.
பிராய்லர் கோழிகள் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதாக வந்த புரளியின் அடிப்படையில் கோழிக்கறியின் விலை வீழ்ச்சி அடைந்தது. ஒரு கிலோ கோழிக்கறி ரூ.60 வரை விற்பனையானது. அதற்கு பிறகு கோழிக்கறியின் மூலம் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பு இல்லை என விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து கோழிக்கறி வாங்குவதற்கு மக்கள் செல்ல தொடங்கினர். தஞ்சையில் நேற்று ஒரு கிலோ கோழிக்கறி ரூ.130 வரை விற்பனை செய்யப்பட்டது. சில இடங்களில் ரூ.110-க்கும் விற்பனையானது. கோழிக்கறி வாங்குவதற்காக மக்கள் அதிக அளவில் வந்திருந்தனர்.
ஆட்டிறைச்சியின் விலை ரூ.700 முதல் ரூ.800 வரை விற்பனையானது. இதற்கு முன்பு ரூ.600 வரையில் விற்பனை செய்யப்பட்டது. திடீர் என ஆட்டிறைச்சியின் விலை அதிகரித்தது பொதுமக்களை கடும் அதிர்ச்சி அடைய வைத்தது. ஆனாலும் ஆட்டிறைச்சி கடைகளில் மக்கள் அதிகாலை முதலே வரிசையில் காத்திருந்து வாங்கி சென்றனர். ஏராளமானோர் ஆட்டிறைச்சி கடைகளை தேடி சென்றதால் சில கடைகளில் காலை 10 மணிக்கே இறைச்சி விற்று தீர்ந்து விட்டது. 12 மணிக்கு முன்பாக பெரும்பாலான கடைகளில் ஆட்டிறைச்சி விற்று விட்டது.
கடைகளில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்பதற்காக வட்டம், கோடுகள் போடப்பட்டு இருந்தன. ஆனால் அதையெல்லாம் மக்கள் யாரும் பொருட்படுத்தவில்லை. எப்போதும்போல் அருகருகே நின்று தான் வாங்கி சென்றனர். ஆனால் மக்கள் கடைக்குள் வந்து விடக்கூடாது என்பதற்காக கயிறு கட்டப்பட்டு இருந்தது.
ஊரடங்கு உத்தரவு காரணமாக தஞ்சை, நாகை ஆகிய மாவட்டங்களில் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை. இதனால் தஞ்சைக்கு கடல்மீன்கள் வரத்து இல்லை. நேற்று மீன் விற்பனை கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்தது. தஞ்சை பர்மா காலனியில் உள்ள மீன்மார்க்கெட்டில் காலை 10.30 மணிக்கே அனைத்து மீன்களும் விற்று தீர்ந்து விட்டது.
ரூ.150 முதல் ரூ.180 வரை விற்பனையான கெண்டை மீன் ரூ.220 முதல் ரூ.250 வரை விற்பனையானது. இறால் மீன் கிலோ ரூ.320-க்கும், விரால் ரூ.600-க்கும் விற்பனையாது. மக்கள் கேட்ட மீன்கள் கிடைக்கவில்லை. இதனால் கடைகளில் இருந்த மீன்களை மக்கள் வாங்கி சென்றனர்.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொண்டும் மக்கள் அலட்சியமாகத்தான் செயல்பட்டு வருகின்றனர். முக கவசம் அணியாததுடன் வரிசையில் நிற்பதையும் மக்கள் தவிர்த்தனர்.
இறைச்சி கடைகளில் நேற்று கூடிய கூட்டத்தை பார்த்தபோது ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருப்பது போலவே தெரியவில்லை. போலீசாரும் இதை எப்படி கையாள்வது என தெரியாமல் விழி பிதுங்கினர்.
Related Tags :
Next Story