நீலகிரி மாவட்டத்தில் முகக்கவசம் தயாரிக்கும் பணி மும்முரம்
நீலகிரி மாவட்டத்தில் முகக்கவசம் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
கூடலூர்,
கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதனால் முகக்கவசம் அணிபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. மேலும் தேவைக்கு ஏற்ப முகக்கவசம் தட்டுப்பாடும் ஏற்பட்டு உள்ளது. இதனை பயன்படுத்தி கூடுதல் விலைக்கு முகக்கவசங்கள் விற்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் முகக்கவசம் கிடைக்காமல் பொதுமக்கள் கைக்குட்டைகளை பயன்படுத்தி வருகின்றனர். இதை தடுக்க தமிழக அரசின் சமூக நலத்துறையின் கீழ் உள்ள தையற்மகளிர் குழுக்கள் மூலம் முகக்கவசம் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் தையற்மகளிர் கூட்டுறவு சங்கம் மூலம் 800 பேர் முகக்கவசம் தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். இதேபோன்று அனைத்து மாவட்டங்களிலும் முகக்கவசம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. கூடலூர் பகுதியில் உள்ள மகளிர் குழுக்கள் முகக்கவசங்களை தயாரித்து, அரசுக்கு வழங்குவதால் அவர்களின் வாழ்வாதாரமும் மேம்பட்டு உள்ளது.
தற்போது 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் மகளிர் குழுக்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் 3 மீட்டர் இடைவெளி விட்டு வரிசையாக அமர்ந்து முகக்கவசங்களை தயாரித்து வருகின்றனர். மேலும் தயாரித்த முகக்கவசங்களை விற்பனைக்காக பார்சல் செய்து மாவட்டம் முழுவதும் அனுப்பி வைக்கின்றனர்.
இதுகுறித்து கூட்டுறவு சங்கத்தை சேர்ந்த பெண்கள் கூறும்போது, இங்கு தயாரிக்கும் முகக்கவசம் அரசு ஆஸ்பத்திரி, நகராட்சி உள்பட அனைத்து துறை அலுவலகங்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பணியில் சுமார் 800 பெண்கள் ஈடுபட்டு உள்ளனர். இதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுகிறது. மேலும் மக்களின் தேவையும் பூர்த்தி செய்யப்படுகிறது என்றனர்.
Related Tags :
Next Story