ஒட்டன்சத்திரம் காந்தி மார்க்கெட் 3 இடங்களில் செயல்பட முடிவு


ஒட்டன்சத்திரம் காந்தி மார்க்கெட் 3 இடங்களில் செயல்பட முடிவு
x
தினத்தந்தி 30 March 2020 10:15 AM IST (Updated: 30 March 2020 9:59 AM IST)
t-max-icont-min-icon

ஒட்டன்சத்திரம் காந்தி மார்க்கெட் 3 இடங்களில் செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஒட்டன்சத்திரம்,

ஒட்டன்சத்திரத்தில் காந்தி மார்க்கெட்டில் இருந்து தமிழகம் முழுவதும் காய்கறிகள் விற்பனைக்கு அனுப்பப்படும். ஊரடங்கையொட்டி இந்த மார்க்கெட்டுக்கு கடந்த 24-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமியிடம் காய்கறி மார்க்கெட்டில் வெங்காய வியாபாரம் செய்து கொள்கிறோம் என வியாபாரிகள் அனுமதி கேட்டனர். இதைத்தொடர்ந்து நேற்று முதல் மார்க்கெட் இயங்க அனுமதி அளிக்கப்பட்டது.

அதையொட்டி நேற்று காலை 7 மணிக்கு வெங்காய வியாபாரம் தொடங்கியது. அங்கு வியாபாரிகள், விவசாயிகள், கூலித் தொழிலாளிகள், கடை ஊழியர்கள் என ஒவ்வொரு கடைகளிலும் அதிகப்படியான கூட்டம் கூடியது. இதனால் கொரோனா வைரஸ் பரவுதலை தடுப்பது குறித்த பாதுகாப்பு என்பது அங்கு கேள்விக்குறியானது. அதிக கூட்டம் காரணமாக அங்குள்ளவர்களுக்கு கொரோனா தொற்று பரவும் சூழ்நிலை ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி, மாவட்ட உதவி ஆணையாளர் (கலால்) கமலக்கண்ணன், தாசில்தார் சரவணன், ஒட்டன்சத்திரம் நகராட்சி ஆணையர் தேவிகா, போலீஸ் துணை சூப்பிரண்டு சீமைச்சாமி ஆகியோர் மார்க்கெட் கடை உரிமையாளர்கள் சங்க தலைவர் தங்கவேல் மற்றும் செயலாளர் ராசியப்பன் மற்றும் நிர்வாகிகளை அழைத்து மார்க்கெட் வளாகத்தில் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

இதில் இன்று (திங்கட்கிழமை) முதல் காந்தி காய்கறி மார்க்கெட்டில் வெங்காய வியாபாரம் நடைபெற வேண்டுமென்றும், தங்கச்சியம்மாபட்டியில் உள்ள இடத்தில் முருங்கை, பாகற்காய், வெண்டைக்காய் உள்ளிட்ட மற்ற காய்கறிகள் விற்பனை செய்ய வேண்டும் என்றும், பஸ் நிலையத்தில் பச்சைமிளகாய் மட்டும் விற்பனை செய்ய வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில் 3 இடங்களுக்கும் 3 நிர்வாகிகள் பொறுப்பேற்று கூட்டம் கூடாமல் கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் வகையில் சமூக இடைவெளி விட்டு செயல்படுத்த வேண்டும். அங்கு வருபவர்களுக்கு குடிநீர், கை கழுவுவதற்கான வசதி செய்து தர வேண்டும். அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும். 3 இடங்களை தவிர வேறு இடத்தில் காய்கறிகளை இறக்கி வியாபாரம் செய்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கடையை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டது. மேலும் சமூக பாதுகாப்புடன் தமிழ்நாட்டில் மட்டும் காய்கறிகளை விற்பனை செய்து கொள்ளலாம் என்றும் கண்டிப்பாக கேரளாவுக்கு காய்கறிகளை அனுப்ப அனுமதி இல்லை என்றும் முடிவு செய்யப்பட்டது. 

Next Story