கொரோனா தடுப்பு நடவடிக்கை: அரசு மருத்துவமனையில் பார்வையாளர்களுக்கு அனுமதி ரத்து
கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பார்வையாளர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டது.
புதுக்கோட்டை,
கொரோனா வைரசின் பாதிப்பு நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில் அதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக மாவட்டம் முழுவதும் சாலைகளில், அரசு மருத்துவமனைகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் தீயணைப்புத்துறை சார்பில் தீயணைப்பு வாகனம் மற்றும் நகராட்சி லாரிகள் மூலம் வீதி வீதியாக சென்று குடியிருப்பு பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நகராட்சி ஆணையர் சுப்பிரமணியன் தலைமையில், மருத்துவக்கல்லூரி டீன் மீனாட்சி சுந்தரம் முன்னிலையில், புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகம், ஆம்புலன்ஸ் வாகனங்கள், டீன் வாகனம் போன்றவற்றில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
புதுக்கோட்டை நகராட்சியில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில், ஒரு தீயணைப்பு வாகனம், 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் லாரி, 2 மினி ஜெட்ரானிக் வாகனங்கள், 15 பேட்டரி மூலம் இயங்கும் வாகனங்கள், கைத்தெளிப்பான் மற்றும் எந்திரத்திரம் மூலம் தெளிப்பான் போன்றவற்றை கொண்டு பணியில் ஈடுபடுத்தி வருகின்றனர்.
மேலும் துப்பரவு பணியில் 250 பேரும், கிருமி நாசினி தெளிக்கும் பணியில் 150 பேரும் ஈடுபட்டு உள்ளதாக நகராட்சி ஆணையர் சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பார்வையாளர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டு உள்ளதாக கல்லூரி டீன் மீனாட்சிசுந்தரம் தெரிவித்து உள்ளார். இதேபோல் ஆவுடையார்கோவில் அருகே பாண்டிபத்திரம் ஊராட்சியில் உள்ள பகுதிகளில் ஊராட்சி சார்பில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
பொன்னமராவதி அருகே வேகுப்பட்டியில் ஊராட்சி மன்ற தலைவர் அர்ஜுனன் தலைமையில், பாண்டிமான் கோவில் வீதி, சிவசக்தி நகர், அம்மா நகர் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story