இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது


இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது
x
தினத்தந்தி 30 March 2020 4:58 AM GMT (Updated: 2020-03-30T10:28:51+05:30)

புதுவையில் இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

புதுச்சேரி, 

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக புதுவையில் பால், மளிகை, காய்கறி, மருந்து மற்றும் இறைச்சி கடைகள் உள்பட அத்தியாவசிய கடைகளைத் தவிர மற்ற வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

வெளிமாநிலங்களில் இருந்து காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் வரத்து குறைந்துள்ளதால் காய்கறிகள் விலை சற்று உயர்ந்துள்ளது. இருந்தபோதிலும் தட்டுப்பாடின்றி மக்களுக்கு கிடைக்கிறது.

புதுவை மக்களை பொறுத்தவரை ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி மற்றும் மீன் வகைகளை விரும்பி சாப்பிடுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் இறைச்சி கடைகளில் கோழிக்கறி, ஆட்டு கறி வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. கடைகளில் கூடிய மக்களை போதிய இடைவெளி விட்டு நிற்க கடைக்காரர்களும், போலீசாரும் அறிவுறுத்தினர். இதைத்தொடர்ந்து நீண்ட வரிசையில் வெகுநேரம் காத்திருந்து மக்கள் இறைச்சி மற்றும் கோழிக்கறியை வாங்கிச் சென்றனர்.

புதுவை நகர பகுதியில் உள்ள இறைச்சிக் கடைகளில் ஆட்டு இறைச்சி கிலோ ரூ.700 முதல் ரூ.800 வரை விற்பனையானது. கோழிக்கறி கிலோ ரூ.140 முதல் ரூ.180-க்கு விற்பனை செய்யப்பட்டது. புறநகர் பகுதியில் கோழி கிலோ ரூ.120 முதல் ரூ.140-க்கு விற்பனையானது.

ஊரடங்கு உத்தரவு காரணமாக புதுவை மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாததால் கடல் மீன்கள் கிடைக்கவில்லை. இதனால் பொதுமக்கள் ஏரி மீன்களை வாங்கி சென்றனர். இந்த மீன்கள் கிலோ ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டது.

கொரோனா தொற்று தற்போது உள்ள நிலையில், மருத்துவ ஆய்வுக்கு உட்படுத்தாமல் இறைச்சிகளை நேரடியாகவே வியாபாரிகள் விற்பனை செய்கின்றனர். பெரும்பாலான கடைகளில் சமூக இடைவெளி முறையாக பின்பற்றப்படவில்லை.ஊரடங்கு உத்தரவு எதற்காக அமல்படுத்தப்பட்டு உள்ளது என்ற விழிப்புணர்வு இல்லாமலும், முக கவசம் அணியாமலும் பொதுமக்கள் கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்கி செல்கின்றனர். கொரோனாவிற்கு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் அரசு இதன் மீதும் கவனம் செலுத்த வேண்டும். அனைவருக்கும் பாதுகாப்பு தேவை என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு ஆகும்.


Next Story