தற்காலிக காய்கறி கடையில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆய்வு
சிவகாசி பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காய்கறி கடைகளை ஆய்வு செய்ய வந்த அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கிருமி நாசினியை தெளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
சிவகாசி,
சிவகாசி நகராட்சி சார்பில் பஸ் நிலையத்தில் தற்காலிக காய்கறி கடைகளை அமைக்க நகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இதனை ஆய்வு செய்ய அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி நேற்று காலை வந்தார். அவரை நகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். வியாபாரிகளிடம் காய்கறிகளை சரியான விலைக்கு விற்பனை செய்ய வேண்டும். கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய கூடாது. அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அமைச்சர் கூறினார். பின்னர் நகராட்சி நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினார்.
பின்னர் தீயணைப்பு வாகனத்தின் உதவியுடன் பஸ் நிலையம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கும் பணியை அமைச்சர் தொடங்கி வைத்தார். பின்னர் அவரே பஸ் நிலையத்தின் ஒரு பகுதி முழுவதும் கிருமிநாசினியை தெளித்தார். இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் வக்கீல் கணேசன், சிவகாசி நகர செயலாளர் அசன்பதுருதீன், ஒன்றிய செயலாளர் வேண்டுராயபுரம் சுப்பிரமணியம், திருத்தங்கல் நகர செயலாளர் பொன்சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அவர் கூறியதாவது:
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின் பேரில் களப்பணி ஆற்றி வருகிறேன். மாவட்ட நிர்வாகம் கொரோனா ஒழிப்பு பணியில் தீவிரமாக இருக்கிறது. அதிகாரிகளை அவ்வப்போது அழைத்து உரிய ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. வளர்ச்சிதுறை அதிகாரிகள் மூலம் அனைத்து பகுதி மக்களுக்கும் முககவசம் வழங்கப்பட்டு வருகிறது. கொரோனாவால் ஏற்படப் போகும் பாதிப்பு குறித்து அறிந்து கொள்ளாத மக்கள் தான் தற்போது 144 தடை உத்தரவு இருந்த போதிலும் வெளியே நடமாடுகிறார்கள். தற்போது கொரோனா பாதிப்பு குறித்து உணரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அடுத்துவரும் நாட்களில் மக்களின் நடமாட்டம் வெகுவாக குறையும்.
பிரதமர் நரேந்திரமோடியும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் தொடர்ந்து பொதுமக்களை தனித்திருக்க வலியுறுத்தி வருவதால் விரைவில் பொதுமக்கள் இதனை உணர்ந்து வீட்டிற்குள் தனித்து இருப்பார்கள். சில கிராமப்புற மக்கள் கொரோனா நோய் தங்களை தாக்காது என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள். இதனால் கூட பலர் வெளியே வந்து செல்கிறார்கள். இது முற்றிலும் தவறான கருத்து. சுகாதாரமாகவும், போதிய பாதுகாப்பும் இல்லாமல் இருந்தால் யாரையும் கொரோனா நோய் தாக்கும். எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடனும் விழிப்புடனும் வீட்டிலேயே இருங்கள்.
விருதுநகர் மாவட்ட மக்கள் மிகவும் கட்டுப்பாட்டுடன் இருப்பதால் தான் இந்த மாவட்டத்தில் கொரோனா நோய் கட்டுக்குள் இருக்கிறது. நோயை தடுக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செய்து வருகிறது. சுகாதாரத்துறை அதிகாரிகளின் பணி பாராட்டத்தக்கது. மக்களை பாதுகாக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்து வருகிறார். இங்கு விற்பனை செய்யப்படும் காய்கறிகளின் விலை குறைவாக உள்ளது. ஆவின் பாலகங்கள் 24 மணி நேரமும் செயல்பட முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். முன்பை விட தற்போது விற்பனை அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி நேற்று மாலை ராஜபாளையம் நகராட்சி அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதில் கலெக்டர் கண்ணன், எம்.எல்.ஏ.க்கள் ராஜவர்மன், சந்திரபிரபா, தாசில்தார் ஆனந்தராஜ், துணை போலீஸ் சூப்பிரண்டு நாகசங்கர் சுகாதாரதுறை துணை இயக்குனர் ராமகணேஷ் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது அமைச்சர் பேசுகையில், ராஜபாளையத்தில் நிலவும் சுகாதார சீர்கேடுகளால் பறவை காய்ச்சல், பன்றி காய்ச்சல், டெங்கு காய்ச்சல், கொரோனா என எந்த நோயும் உடனடியாக இங்கு தாக்குகிறது என்றார். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராஜபாளையத்தை சேர்ந்த நபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதற்கு, மதுரையில் நடைபெற்ற அவரது மகன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வெளிநாட்டை சேர்ந்த ஒருவர் மணமகன் வீட்டில் 2 நாட்கள் தங்கி இருந்தது காரணமாக இருக்கலாம் என பொது சுகாதார துணை இயக்குனர் ராம் கணேஷ் தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர் இருந்த வீடு மற்றும் அவர் சென்று வந்த இடங்களில் சுகாதார பணிகளை முடுக்கி விட அமைச்சர் உத்தரவிட்டார்.
பல்வேறு துறை அதிகாரிகள் இணைந்து ராஜபாளையம் முழுவதும் சல்லடை போட்டு தேடி கிருமியை அழிக்க முழுவீச்சில் சுகாதாரப் பணிகள் நடைபெற்று வருகிறது என அவர் நிருபர்களிடம் தெரிவித்தார்.
Related Tags :
Next Story