கல்வி கட்டணம் வசூலிக்கக்கூடாது; கர்நாடகத்தில் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை - மந்திரி சுரேஷ்குமார் அறிவிப்பு
கர்நாடகத்தில் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பணிக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதாகவும், கல்வி கட்டணம் வசூலிக்க கூடாது என்றும் பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் அறிவித்துள்ளார்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. 80-க்கும் மேற்பட்டவர்கள் அந்த வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கர்நாடகம் உள்பட நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் பெங்களூருவில் உள்ள சில தனியார் பள்ளிகள், 2020-21-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை தொடங்கியுள்ளது.
அந்த பள்ளிகள், ஏப்ரல் மாத முதல் வாரத்தில் கல்வி கட்டணத்தை செலுத்துமாறு பெற்றோருக்கு சுற்றறிக்கையை அனுப்பி வைத்துள்ளன. தொழில்கள் முடங்கியுள்ளதால், கல்வி கட்டணத்தை எப்படி செலுத்துவது என்று பெற்றோர் மிகுந்த கவலையில் ஆழ்ந்துள்ளனர். இதுதொடர்பாக கல்வித்துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.
மாணவர் சேர்க்கைக்கு தடை
இந்த நிலையில் இதுதொடர்பாக கர்நாடக பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார், தனியார் பள்ளி நிர்வாகிகளுடன் பெங்களூருவில் நேற்று ஆலோசனை நடத்தினார். புதிய மாணவர் சேர்க்கைக்கும், கட்டணம் வசூலிக்கவும் தடை விதிக்கப்படுவதாக அறிவித்தார். அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை இதை பின்பற்ற வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்
இதில் பேசிய மந்திரி சுரேஷ்குமார், கொரோனா வைரசை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், தொழில்கள் முடங்கியுள்ளன. இந்த நேரத்தில் கல்வி கட்டணத்தை செலுத்துமாறு கூறுவது சரியல்ல. அதனால் அதை தள்ளிவைக்க வேண்டும், சேர்க்கையையும் ஒத்திவைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். இதை மீறி தனியார் பள்ளிகள் செயல்பட்டால் சட்டப்படி கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆசிரியர்களுக்கு விடுமுறை நீட்டிப்பு
மேலும் கொரோனா பாதிப்பை தொடர்ந்து அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. இந்த விடுமுறை ஏப்ரல் 13-ந் தேதி வரை நீட்டித்துள்ளதாக மந்திரி சுரேஷ்குமார் அறிவித்துள்ளார்.
Related Tags :
Next Story