கம்பம், தேனியில் உதவித்தொகை பெற வங்கிகள் முன்பு திரண்ட முதியவர்கள்


கம்பம், தேனியில் உதவித்தொகை பெற வங்கிகள் முன்பு திரண்ட முதியவர்கள்
x
தினத்தந்தி 31 March 2020 4:52 AM GMT (Updated: 31 March 2020 4:52 AM GMT)

கம்பம், தேனியில் உதவித்தொகை பெற வங்கிகள் முன்பு முதியவர்கள் ஏராளமானோர் திரண்டனர். அப்போது அவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் காத்திருந்தனர்.

கம்பம்,

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மத்திய-மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளன. அத்தியாவசிய பொருட்களான காய்கறி, பால் உள்ளிட்டவற்றை வாங்குவதற்கு மட்டும் மக்கள் வெளியே வரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் கடைகள், சந்தைகளில் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் ஒவ்வொருவரும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் அரசு வலியுறுத்தி உள்ளது.

இந்தநிலையில் நேற்று கம்பம் ஏ.கே.ஜி. திடல் அருகில் உள்ள கூட்டுறவு வங்கியில் முதியோர் உதவித்தொகை வாங்க முதியவர்கள் ஏராளமானோர் திரண்டனர். கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில் அவர்கள் எந்தவித பாதுகாப்பும் இல்லாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் வங்கிக்கு வெளியே சாலையில் காத்திருந்தனர். இதனால் வங்கி அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். உடனே அதிகாரிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு வந்த போலீசார், உதவித்தொகை வாங்க வந்த முதியவர்களை சமூக இடைவெளியில் வரிசையில் நிற்க வைத்தனர். அதன்பிறகு ஒவ்வொருவராக சென்று உதவித்தொகை பெற்று சென்றனர்.

இதேபோல் தேனி அல்லிநகரத்தில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி முன்பும் உதவித்தொகை பெறுவதற்கு முதியவர்கள் ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல், நெருக்கமாக வரிசையில் காத்திருந்தனர். பின்னர் அங்கு அல்லிநகரம் போலீசார் வந்தனர். அவர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து முதியவர்கள் கூறுகையில், இந்த மாதம் ஆரம்பத்தில் கொடுக்க வேண்டிய முதியோர் உதவித்தொகை நேற்று முன்தினம் வரை கிடைக்கவில்லை. இன்று (நேற்று) வழங்கப்படுவதாக அறிவித்ததால் தான் கூட்டம் கூடியது. எனவே தற்போதைய சூழ்நிலையில் பழைய முறைப்படி முதியோர் உதவித்தொகையை தபால்காரர் மூலம் வீட்டிற்கே தேடி சென்று கொடுக்க வேண்டும் என்றனர்.

Next Story