காய்கறி சந்தையாக மாறிய பஸ் நிலையம்: மக்கள் ஆதரவு இல்லாததால் வியாபாரிகள் கவலை


காய்கறி சந்தையாக மாறிய பஸ் நிலையம்: மக்கள் ஆதரவு இல்லாததால் வியாபாரிகள் கவலை
x
தினத்தந்தி 31 March 2020 10:33 AM IST (Updated: 31 March 2020 10:33 AM IST)
t-max-icont-min-icon

கூட்ட நெரிசலை தவிர்க்கும் நடவடிக்கையாக திண்டுக்கல் பஸ் நிலையம் தற்காலிக காய்கறி சந்தையாக நேற்று மாற்றப்பட்டது. ஆனால் மக்கள் ஆதரவு இல்லாததால் காய்கறி விற்பனை சூடுபிடிக்கவில்லை. இதனால் வியாபாரிகள் கவலையடைந்தனர்.

திண்டுக்கல்,

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. கடைகள் அடைக்கப்பட்டு, பஸ், ஆட்டோ உள்ளிட்ட வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. மாநகராட்சி அதிகாரிகள், தூய்மை பணியாளர்கள் நகரின் முக்கிய வீதிகளில் கிருமிநாசினி மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மளிகை கடைகள், காய்கறி சந்தைகளில் கூட்ட நெரிசலை தவிர்க்கும்படி பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் காய்கறி சந்தைகளில் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், ரவுண்டுரோடு, மேட்டுப்பட்டி, லாரிபேட்டை, நாகல்நகர் ஆகிய 4 இடங்களில் தற்காலிக காய்கறி சந்தைகள் அமைக்கப்பட்டன. இவற்றில் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் அதிக அளவில் கூடியதால் மேலும் ஒரு இடத்தில் காய்கறி சந்தை அமைக்க கலெக்டர் விஜயலட்சுமி உத்தரவிட்டார்.

அதன்படி திண்டுக்கல் காமராஜர் பஸ்நிலையம் நேற்று முதல் தற்காலிக காய்கறி சந்தையாக மாற்றப்பட்டது. நத்தம், மதுரை, நெல்லை உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் நிறுத்தப்படும் இடங்கள் காய்கறிகளை விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு ஒதுக்கப்பட்டன. மேலும் அந்த இடங்களின் முன்பு சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் ஒரு மீட்டர் இடைவெளியில் கோடுகள் வரையப்பட்டிருந்தன. கடந்த சில நாட்களாக காய்கறிகளை வாங்க மக்கள் கூட்டம், கூட்டமாக வந்ததால் பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்ட சந்தையிலும் அதிக அளவில் காய்கறிகள் விற்பனையாகும் என்று வியாபாரிகள் எதிர்பார்த்தனர்.

ஆனால் மிக சொற்ப எண்ணிக்கையிலேயே நேற்று காய்கறிகளை வாங்க பொதுமக்கள் வந்தனர். எதிர்பார்த்தபடி காய்கறிகள் விற்பனை ஆகாததால் வியாபாரிகள் கவலையடைந்தனர். மேலும் காலை 7 மணிக்கு தொடங்கிய சந்தை 11.45 மணிக்குள் மூடப்பட்டுவிட்டது. சந்தை திறக்கப்பட்டது குறித்த தகவல் மக்களை முழுமையாக சென்றடையாததாலும், ஏற்கனவே கடந்த சில நாட்களில் மக்கள் போட்டி போட்டுக்கொண்டு காய்கறிகளை வாங்கியதாலும் பஸ் நிலையத்தில் தொடங்கப்பட்ட காய்கறி சந்தைக்கு பொதுமக்கள் வருவது குறைந்திருக்கலாம் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

சந்தைக்கு சில பெண்கள் முக கவசம் அணியாமல் வந்திருந்தனர். இதை கவனித்த போலீசார் அவர்களின் துப்பட்டாவை முக கவசம் போல் பயன்படுத்தும்படி அறிவுறுத்தினர். அதன் பின்னர் அந்த பெண்கள் துப்பட்டாவை முக கவசமாக பயன்படுத்தி காய்கறிகளை வாங்கி சென்றனர்.

சந்தையில் ஒரு கிலோ சவ்சவ் ரூ.20-க்கும், உருளைக்கிழங்கு ரூ.50-க்கும், தக்காளி ரூ.30-க்கும், பெரிய வெங்காயம் ரூ.40-க்கும், சின்ன வெங்காயம் ரூ.80-க்கும் விற்பனை ஆனது. 

Next Story