ஊத்தங்கரை அருகே, தண்ணீர் பிடிக்கும் தகராறில் தொழிலாளி அடித்துக்கொலை - தந்தை-மகன்கள் உள்பட 7 பேர் கைது


ஊத்தங்கரை அருகே, தண்ணீர் பிடிக்கும் தகராறில் தொழிலாளி அடித்துக்கொலை - தந்தை-மகன்கள் உள்பட 7 பேர் கைது
x
தினத்தந்தி 31 March 2020 12:48 PM IST (Updated: 31 March 2020 12:48 PM IST)
t-max-icont-min-icon

ஊத்தங்கரை அருகே தண்ணீர் பிடிக்கும் தகராறில் தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தந்தை-மகன்கள் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

ஊத்தங்கரை,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த புதூர் புங்கனை ஊராட்சிக்கு உட்பட்ட ஒட்டம்பட்டி பகவத்சிங் நகரை சேர்ந்தவர் முனுசாமி (வயது 60), கூலித்தொழிலாளி. அதே பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (52). நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள பொது குழாயில் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது. அப்போது நாகராஜ் குடும்பத்தினர் குழாயில் தண்ணீரை பிடித்து அவர்களின் வீட்டில் உள்ள செடிகளுக்கு ஊற்றி கொண்டிருந்தனர்.

இதைப் பார்த்த முனுசாமி குடும்பத்தினர், அவர்களிடம் குடிக்கவே தண்ணீர் இல்லை. செடிகளுக்கு தண்ணீரை ஊற்ற வேண்டுமா? எனக்கேட்டனர். இதனால் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் வாக்குவாதம் முற்றி கைகலப்பானது. அப்போது நாகராஜ், அவரது மகன்கள் மாரிமுத்து (23), இளையராஜா (30), அருண்பாண்டியன் (29), உறவினர்கள் முருகன் (45), வேலு (39), பிரபாகரன் (22) மற்றும் நாகராஜனின் மனைவி சின்னபாப்பா (48), சரோஜா (44) ஆகிய 9 பேரும் சேர்ந்து முனுசாமி குடும்பத்தினரை தாக்கினார்கள்.

இதில் முனுசாமியின் மகன் கோவிந்தசாமிக்கு (32) கத்திக்குத்து விழுந்தது. இதனை தடுக்க வந்த முனுசாமி கட்டையால் தாக்கப்பட்டார். பலத்த காயம் அடைந்த 2 பேரையும் உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு இரவு 11 மணி அளவில் முனுசாமி பரிதாபமாக இறந்தார். கோவிந்தசாமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த தகராறை தடுக்க சென்ற முனுசாமி குடும்பத்தைச் சேர்ந்த குமார் (29), ஆனந்த் (28), கண்ணப்பன், சுதா (26) ஆகியோரும் காயம் அடைந்தனர். அவர்கள் ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இது தொடர்பாக முனுசாமியின் மகன் குமார் கொடுத்த புகாரின் பேரில் கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார், நாகராஜ், அவருடைய மகன்கள் மாரிமுத்து, இளையராஜா, அருண்பாண்டியன் மற்றும் உறவினர்கள் முருகன், வேலு, பிரபாகரன் ஆகிய 7 பேரை கைது செய்தனர். அதேபோல மாரிமுத்து கொடுத்த புகாரின் பேரில் குமார், வெங்கடராமன், சிவநேசன், சக்கரபாணி ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஊத்தங்கரை அருகே தண்ணீர் பிடிக்கும் தகராறில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் தொழிலாளி கட்டையால் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story