திருச்சி டாஸ்மாக் கடையில், ரூ.1 லட்சம் மதுபாட்டில்கள் திருட்டு - மதுபிரியர்களின் கைவரிசையா? போலீசார் விசாரணை


திருச்சி டாஸ்மாக் கடையில், ரூ.1 லட்சம் மதுபாட்டில்கள் திருட்டு - மதுபிரியர்களின் கைவரிசையா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 31 March 2020 2:16 PM IST (Updated: 31 March 2020 2:16 PM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் டாஸ்மாக் கடையில் ரூ.1 லட்சம் மது பாட்டில்கள் திருட்டு போனது. இது மதுபிரியர்களின் கைவரிசையா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மலைக்கோட்டை,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் திருச்சி மாவட்டத்திலும் டாஸ்மாக் கடைகள் பூட்டப்பட்டுள்ளன. திருச்சி உறையூர் கோணக்கரை சுடுகாடு பகுதியில் அடுத்தடுத்து 2 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில் ஒரு கடையில் நேற்று மதியம் பூட்டுகள் இல்லாததை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்தனர்.

இதுகுறித்து மது விலக்கு அமலாக்க பிரிவு மற்றும் உறையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து உறையூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும் அந்த கடையின் மேற்பார்வையாளர், விற்பனையாளருக்கும் தகவல் தெரிவித்து வரவழைக்கப்பட்டனர்.

கடையின் உள்ளே சென்று போலீசார் பார்த்தபோது அங்கிருந்ததில் பல மதுபாட்டில்கள் திருட்டு போய் இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்து உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஊரடங்கினால் டாஸ்மாக் கடை மூடப்பட்டாதல் மது குடிக்காமல் திணறிய மதுபிரியர்கள் யாரேனும் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என கருதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 24-ந் தேதி டாஸ்மாக் கடை மூடப்பட்ட போது ரூ.10 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் இருந்ததாக கடை மேற்பார்வையாளர், போலீசாரிடம் தெரிவித்தார். கடையில் மீதம் இருந்த மற்ற மது பாட்டில்கள் வாகனம் மூலம் வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த டாஸ்மாக் நிறுவனத்தின் மாவட்ட பொதுமேலாளர் துரைமுருகனும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தார்.

Next Story