பெரம்பலூர் மாவட்டத்தில், ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் சாலையில் சுற்றித்திரியும் பொதுமக்கள் - கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறல்


பெரம்பலூர் மாவட்டத்தில், ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் சாலையில் சுற்றித்திரியும் பொதுமக்கள் - கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறல்
x
தினத்தந்தி 31 March 2020 2:30 PM IST (Updated: 31 March 2020 2:30 PM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் பொதுமக்கள் சாலையில் சுற்றித்திரிகின்றனர். அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

பெரம்பலூர்,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து பெரம்பலூர் மாவட்டத்திற்கு வந்த 1,500-க்கும் மேற்பட்டவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக்குழுவினரால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது ஊரடங்கு, 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. இதனால் பஸ்கள், ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள் ஓடாத நிலையில், பொதுமக்கள் இருசக்கர வாகனங்களை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். சிலர் சொந்த காரை பயன்படுத்துகின்றனர். மேலும் பெரம்பலூர் மாவட்ட மக்களில் பலர், ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவை கடைபிடிக்கவில்லை என்று சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கொரோனா வைரசின் பாதிப்பு தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுமக்களில் பெரும்பாலானோர் சாலையில் சுற்றித்திரிகின்றனர். இதனால் சாலையில் எப்போதும் பொதுமக்களின் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கிறது. தள்ளுவண்டியில் வெள்ளரிக்காய், பழங்களின் வியாபாரமும் பகல் நேரம் முழுவதும் நடைபெறுகிறது. பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் கொரோனா வைரசின் தாக்கம் குறித்து பொதுமக்களுக்கு எவ்வளவோ எடுத்து கூறியும், அதனை பலர் அலட்சியப்படுத்தும் விதமாக சாலையில் சுற்றித்திரிகிறார்கள்.

பெரம்பலூர் மாவட்ட போலீசாரும் நகர் பகுதியில் தினமும் ரோந்து செல்லும் போது, கூடிநிற்கும் பொதுமக்களை வீட்டிற்கு செல்லுமாறு அறிவுறுத்தினாலும், போலீசார் நிற்கும்போது அவர்கள் வீட்டிற்கு செல்வதை போல் நடித்துவிட்டு, போலீசார் சென்ற பிறகு அவர்கள் திரும்பி வந்து கூடிநின்று பேசுகிறார்கள். சாலையில் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் சுற்றித்திரிபவர்களுக்கு போலீசார் நூதன தண்டனை வழங்கியும், வழக்குப்பதிவு செய்தும், வாகனங்களை பறிமுதல் செய்தும் வருகின்றனர். மேலும் கைது நடவடிக்கையிலும் போலீசார் ஈடுபடுகின்றனர்.

ஆனாலும் பொதுமக்கள் ஏதாவது ஒரு காரணத்தை போலீசாரிடம் கூறிவிட்டு, சாலையில் செல்கின்றனர். அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் இடத்திலும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் உள்ளனர். கிராமங்களிலும் ஊரடங்கு உத்தரவு மீறப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகம் திணறி வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்திற்கு ராணுவ வீரர்கள் வந்தால் தான் ஊரடங்கு உத்தரவை முழுமையாக செயல்படுத்த முடியும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Next Story