கடலூரில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 2 கடைகளுக்கு ‘சீல்’ - அதிகாரிகள் நடவடிக்கை
கடலூரில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத 2 கடைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
கடலூர்,
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் மளிகை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து கடைகளிலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசால் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத கடைகளுக்கு ‘சீல்’ வைத்தும் கடைகளின் உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் கடலூர் மஞ்சக்குப்பம் நேதாஜி சாலையில் உள்ள தனியார் மருந்து கடையில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் பொதுமக்கள் கூட்டமாக நின்று பொருட்களை வாங்கி கொண்டிருந்தனர். இதைப்பார்த்த கடலூர் நகர்நல அலுவலர் டாக்டர் அரவிந்த் ஜோதி, தாசில்தார் செல்வக்குமார், வருவாய்த்துறை அதிகாரி சுகந்தி மற்றும் அதிகாரிகள் கடை உரிமையாளரை எச்சரித்தனர். தொடர்ந்து அந்த கடையை பூட்டி ‘சீல்’ வைத்தனர். இதேபோல் கடலூர் முதுநகர் பிரதான சாலையில் உள்ள மளிகை கடையிலும் பொதுமக்கள் கூட்டமாக நின்று பொருட்களை வாங்கி கொண்டிருந்தனர். இதையடுத்து அந்த மளிகை கடையையும் அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்தனர்.
Related Tags :
Next Story