கரூர் பஸ் நிலையத்தில், தற்காலிக காய்கறி கடைகள் செயல்பட தொடங்கின - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆய்வு


கரூர் பஸ் நிலையத்தில், தற்காலிக காய்கறி கடைகள் செயல்பட தொடங்கின - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆய்வு
x
தினத்தந்தி 31 March 2020 9:57 AM GMT (Updated: 31 March 2020 9:57 AM GMT)

கரூர் பஸ் நிலையத்தில் தற்காலிக காய்கறி கடைகள் செயல்பட தொடங்கியதை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார்.

கரூர்,

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுக்குள் கொண்டுவர இந்தியா முழுவதும் ஊரடங்கு, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கரூர் பஸ் நிலையத்தையொட்டிய மார்க்கெட்டில் போதிய இடவசதி இல்லாததால், அங்குள்ள காய்கறி கடைகளை கரூர் பஸ் நிலையத்திற்கு மாற்றி அமைத்து சமூக விலகலை மக்களை கடைபிடிக்க வைத்து காய்கறிகளை வினியோகிக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.

அதன் பேரில் கரூர் பஸ் நிலையத்தில் தற்காலிக காய்கறி கடைகள் செயல்பட தொடங்கியது. மொத்தம் 33 கடைகள் அங்கு வைக்கப்பட்டிருந்தன. மக்கள் சமூக விலகலை கடைபிடித்து காய்கறிகளை வாங்கி சென்றனர். வாகனங்களை நிறுத்துவதற்கு தனி இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

கரூர் பஸ் நிலையம், திருவள்ளுவர் மைதானத்தில் அமைக்கப்பட்ட தற்காலிக காய்கறி கடைகளை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட கலெக்டர் அன்பழகன் முன்னிலை வகித்தார். அப்போது அங்கிருந்த மக்களிடம், ஒவ்வொருவரையும் தனிமைப்படுத்துவதன் மூலமே கொரோனா பரவலை தடுக்க முடியும். இதனால் தான் சமூக விலகலை கடைபிடித்து பொருட்கள் வாங்க வலியுறுத்துகிறோம் என மக்களிடம் அமைச்சர் கேட்டு கொண்டார். மேலும் காய்கறிகள் வரத்தில் ஏதேனும் இடையூறு உள்ளதா? என்பது குறித்து வியாபாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன், நகராட்சி ஆணையர் சுதா, அரசு போக்குவரத்துக்கழக பொது மேலாளர் குணசேகரன், கரூர் வட்டாட்சியர் அமுதா உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

பின்னர் நிருபர்களிடம் போக்குவரத்து துறை அமைச்சர் கூறியதாவது:-

கரூர் நகரில் காமராஜர் மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் காய்கறிகள் வாங்க மக்கள் கூட்டம் கூடுவதை தடுக்கும் பொருட்டு, சமூக விலகலை கடைபிடிப்பதற்கு ஏதுவாக கரூர் நகராட்சிக்குட்பட்ட திருவள்ளுவர் மைதானம், வெங்கமேடு எம்.ஜி.ஆர்.சிலை அருகில், குளத்துப்பாளையம் சாலை வாரச்சந்தை அருகில், பசுபதி பாளையம் பஸ் நிறுத்தம் அருகில், காந்திகிராமம் மைதானம், கோவை சாலை வேலுச்சாமிபுரம், தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரி முன்புறம், செங்குந்தபுரம் பிரதான சாலை ஆகிய 8 இடங்களில் வியாபாரிகள் காய்கறி கடைகள் வைத்து வியாபாரம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் தான் கரூர் பஸ் நிலையத்தில் காய்கறி கடைகள் செயல்படுகின்றன. இங்குள்ள காய்கறி கடைகளில் முகப்பு பகுதியில் காய்கறிகளின் விலைப்பட்டியல் வைக்கப்பட்டுள்ளது. இதனால் அதிக விலைக்கு காய்கறிகள் விற்கப்படுவது தடுக்கப்படுகின்றது. ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சிக்கடைகளில் அதிக கூட்டம் கூடுவதை கண்காணிக்க சம்பந்தப்பட்ட பகுதிகளின் பொறுப்பு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

Next Story