அரியலூர் அரசு மருத்துவமனையில், கொரோனாவுக்கான தனி வார்டில் 19 பேருக்கு சிகிச்சை
அரியலூர் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கான தனி வார்டில் 19 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அரியலூர்,
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மதுரையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். அவருடைய பயண விவரங்களை அதிகாரிகள் சேகரித்தனர். அதில் அவருடன் அரியலூர் மாவட்டம் செந்துறையை சேர்ந்த 3 பேர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவக்குழுவினரின் தொடர் கண்காணிப்பில் இருந்து வந்தனர்.
மேலும் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், கொரோனாவால் இறந்த மதுரையை சேர்ந்தவருடன் அரியலூரை சேர்ந்த ஒருவரும், திருமானூரை சேர்ந்த ஒருவரும் விமானத்தில் பயணம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த 2 பேரையும் மருத்துவக்குழுவினர், அவர்களின் வீடுகளிலேயே தனிமைப்படுத்தி வைத்திருந்தனர்.
இதற்கிடையே சென்னையில் இருந்து வந்த அரியலூரை சேர்ந்த பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, அரியலூர் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கான தனி வார்டில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் அந்த பெண்ணின் செல்போனை பயன்படுத்திய 3 ஒப்பந்த மருத்துவ தூய்மை பணியாளர்கள் தனி வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனாவால் இறந்த மதுரையை சேர்ந்தவருடன் விமானத்தில் பயணம் செய்து வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட 5 பேரையும், கலெக்டர் ரத்னா உத்தரவின்பேரில் அதிகாரிகள், போலீசார் உதவியுடன் மருத்துவ குழுவினர் நேற்று ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து, அங்குள்ள கொரோனாவுக்கான தனி வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும், அவர்களுக்கு சளி, காய்ச்சல் ஏற்பட்டால், அவர்களின் ரத்த மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்படும் என்றும் மருத்துவக்குழுவினர் தெரிவித்தனர். அரியலூர் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கான தனி வார்டில் மொத்தம் 19 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story