கிருமாம்பாக்கத்தில் பயங்கர விபத்து: அரசு ஜீப், ஆம்புலன்ஸ் மோதல்; முதியவர் பலி - பெண் டாக்டர் உள்பட 5 பேர் படுகாயம்
கிருமாம்பாக்கத்தில் அரசு ஜீப்பும்-ஆம்புலன்சும் பயங்கரமாக மோதிக் கொண்டன. இதில் முதியவர் பலியானார். பெண் மருத்துவர் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
பாகூர்,
கடலூர் மாவட்டம் பாலூர், நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (39). இவர் நேற்று காலை வலிப்பு நோயால் உடல்நலம் பாதித்து மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை மனைவி தனபாக்கியம் (37), தந்தை மணி (63) ஆகியோர் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பாலமுருகனை பரிசோதித்த டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பரிந்துரைத்தனர். இதனையடுத்து தனியார் ஆம்புலன்ஸ் மூலம் பாலமுருகனை ஏற்றிக் கொண்டு புறப்பட்டு வந்தனர். ஆம்புலன்சை கடலூர் மாவட்டம் குணமங்கலத்தை சேர்ந்த ராஜசேகர் (32) என்பவர் ஓட்டி வந்தார்.
கிருமாம்பாக்கம் போலீஸ் நிலையம் எதிரே சாலையின் குறுக்கே இருந்த தடுப்புகளை கடந்த போது ஆம்புலன்சும், புதுச்சேரியில் இருந்து கடலூர் சென்ற தமிழக அரசு ஜீப்பும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக் கொண்டன.
இந்த விபத்தில் ஆம்புலன்ஸ் உருக்குலைந்தது. காரின் முன்பக்கம் நொறுங்கியது. ஆம்புலன்சில் வந்த பாலமுருகனை சிகிச்சைக்காக அழைத்துச் சென்ற அவரது தந்தை மணி படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
பாலமுருகன், அவரது மனைவி தனபாக்கியம், ஆம்புலன்ஸ் டிரைவர் ராஜசேகர் மற்றும் அரசு ஜீப்பில் வந்த முத்தியால் பேட்டைசோலை நகரைச் சேர்ந்த சீதாகுமாரி (29), டிரைவர் வசந்த் (30) ஆகிய 5 பேர் படுகாயமடைந்தனர்.
போலீஸ் நிலையம் எதிரே நடந்த இந்த பயங்கர விபத்தை பார்த்ததும் அங்கிருந்த போலீஸ் சூப்பிரண்டுகள் ஜிந்தா கோதண்டராமன், ரச்சனா சிங், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் தனசேகரன், கிருமாம்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தன்வந்திரி மற்றும் போலீசார் சென்று விபத்தில் காயமடைந்தவர் களை போராடி மீட்டனர். அவர்களை அருகில் உள்ள தனியார் மருத்துவமனை, புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார். விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்காக கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் அலுவலகம் சார்பில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மாவட்ட பயிற்சி மருத்துவ அலுவலராக புதுச்சேரியை சேர்ந்த டாக்டர் சீதாகுமாரி சிறப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்.
இதையொட்டி அவரை தினமும் புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு ஜீப்பில் அழைத்துச் சென்று வந்துள்ளனர். அதுபோல் நேற்றும் அழைத்துச் சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Next Story