கொரோனா வைரஸ் பாதிப்பை அறிய 4 இடங்களில் பரிசோதனை மையங்கள் முதல்-அமைச்சர் நாராயணசாமி தகவல்
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை அறிய 4 இடங்களில் பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
புதுச்சேரி,
புதுவை சட்டசபையில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து முதல்-அமைச்சர் நாராயணசாமி கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அறிக்கை ஒன்றை வாசித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சீனாவில் உருவான கோவிட்-19 என்றழைக்கப்படும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. நாம் இப்போது 2-ம் நிலையில் உள்ளோம். இந்த நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் புதுச்சேரி அரசு காலம் தாழ்த்தாமல் மிகுந்த முன்னெச்சரிக்கை பணிகளை உடனடியாக மேற்கொண்டது.
அதன்படி புதுச்சேரி மாநிலத்தின் 4 பிராந்தியங்களிலும் (புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம்) மார்ச் மாதம் முதல் வாரத்தில் தனிமைப்படுத்துவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. அரசு, தனியார் மருத்துவமனை டாக்டர்கள், சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு பயிலரங்கம் நடத்தப்பட்டது.
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் 750 படுக்கைகள் கொண்ட சிறப்பு மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. புதுச்சேரி மகாத்மா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி, இ.எஸ்.ஐ. மருத்துவமனை உள்பட 7இடங்களில் 225 படுக்கைகள் கொண்ட தனிமைப்படுத்துதல் மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. காரைக்காலில் 4 இடங்களில் 36 படுக்கைகள், மாகியில் 10 இடங்களில் 162 படுக்கைகள், ஏனாம் பகுதியில் 2 இடங்களில் 20 படுக்கைகள் கொண்ட தனிமைப்படுத்துதல் மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக புதுச்சேரியில் 8 மருத்துவமனைகளில் 16 வென்டிலேட்டர்களுடன் 150 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. காரைக்காலில் ஒரு மருத்துவமனையில் 5 வென்டிலேட்டர்களும் 218 படுக்கைகளும், மாகியில் ஒரு மருத்துவமனையில் 8 படுக்கைகளும், ஏனாமில் ஒரு மருத்துவமனையில் 3 படுக்கைகளும் தயார் நிலையில் உள்ளன.
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை அறிய புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய 4 இடங்களில் பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 62, காரைக்காலில் 2, மாகியில் 9 என மொத்தம் 73பேரின் ரத்த மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஏனாமில் இதுவரை பரிசோதனைக்கு எதுவும் அனுப்பப்படவில்லை. இதில் 70 பேரின் முடிவுகள் வந்ததில் கொரோனா பாதிப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது. 3 மாதிரிகளின் முடிவுகள் எதிர்பார்க்கப்படுகிறது.
புதுச்சேரி அரசு சுகாதாரத்துறைக்கு மாநில அரசின் நிதியில் இருந்து ரூ.7½ கோடி வழங்கப்பட்டுள்ளது. மேலும் புதுவை மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.2 கோடியும், புதுச்சேரி, காரைக்கால் மாவட்டத்திற்கு ரூ.1½ கோடியும், மாகிக்கு ரூ.1 கோடியும், ஏனாமிற்கு ரூ.25லட்சமும் வழங்கப்பட்டுள்ளது.
புதுவை மாநிலத்தில் மொத்தம் 2,150 பாதுகாப்பு கவசம், 4,250 என்.95 முக கவசம், 35,000 முப்பட்டை முக கவசம், 12 வென்டிலேட்டர்கள், 112 வைரல் டிரான்ஸ்போர்ட் மீடியம், 20 தீவிர சிகிச்சை பிரிவு கட்டில்கள் மற்றும் 1,500 லிட்டர் ஐசோ புரோப்பைல் ஆல்கஹால் ஆகியவை தயார் நிலையில் உள்ளன. இதுதவிர 20 வென்டிலேட்டர்கள், 10 ஈ.சி.ஜி. மானிட்டர்கள், 10 மல்டி பாரா மானிட்டர்கள், 50 ஆயிரம் என்.95 முக கவசம் ஆகியவை வாங்குவதற்காக செலவின ஒப்புதல் வழங்கப்பட்டு, மருந்துகள் ஆர்டர் செய்யப்பட்டு விட்டன. தனியார் நிறுவனம் 5 ஆயிரம் என்.95 முக கவசங்களை வழங்கி உள்ளது. அவை டெல்லியில் இருந்து கொண்டு வரப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story