டெல்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பியவர்கள்: நெல்லையில் ஒரே நாளில் 22 பேருக்கு கொரோனா பாதிப்பு - தனி வார்டில் தீவிர சிகிச்சை
நெல்லையில் ஒரே நாளில் 22 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்கள் அனைவரும் டெல்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பியவர்கள் ஆவார்கள்.
நெல்லை,
டெல்லி நிஜாமுதீனில் நடைபெற்ற மாநாட்டில் இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளை சேர்ந்த வர்கள் கலந்து கொண்டனர். இதில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர்களும் பங்கேற்றனர். பின்னர் அவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பினர்.
இந்த நிலையில் அந்த மாநாட்டில் கலந்து கொண்ட பலருக்கு கொரோனா வைரஸ் தாக்கி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மாநாட்டில் கலந்து கொண்டவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வந்தது.
இதில் நெல்லை மாநகர பகுதியைச் சேர்ந்த 18 பேர், வள்ளியூர் பகுதியை சேர்ந்த ஒருவர், களக்காடு பகுதியை சேர்ந்த 2 பேர் மற்றும் நெல்லை அருகே உள்ள செய்துங்கநல்லூரை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 22 பேர் இந்த மாநாட்டுக்கு சென்று திரும்பியது தெரியவந்தது.
இதையடுத்து இவர்கள் 22 பேரையும் நேற்று மருத்துவ குழுவினர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். அங்குள்ள கொரோனா தனிமை வார்டில் அவர்கள் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவர்களது உடல் நிலை, சளி, காய்ச்சல் ஆகியவை குறித்து முதற்கட்ட பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் 22 பேருக்கும் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு, கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா? என்பதை கண்டறிய ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் 22 பேருக்கும் கொரோனா பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது.
இதற்கிடையே அந்த 22 பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளதாக சென்னையில் சுகாதார துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்து உள்ளார்.
இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 22 பேரின் குடும்பத்தினரும் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இவர்கள் வசிக்கும் பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
22 பேருக்கும் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டதால் அவர்களது வீடு இருக்கும் பகுதி முழுவதும் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
டெல்லி மாநாட்டில் பங்கேற்று நெல்லை திரும்பிய 22 பேருக்கு ஒரே நாளில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ள சம்பவம் மக்களிடையே பீதியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
கடையநல்லூர்
மேலும் தென்காசி மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த 2 பேர் டெல்லி மாநாட்டிற்கு சென்று திரும்பினார்கள். அவர்கள் 2 பேருக்கும் கொரோனா அறிகுறி உள்ளதா? என்ற சந்தேகத்தின் பேரில் தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களின் ரத்தம், சளி ஆகியவை பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இதனால் தென்காசி மாவட்டத்திலும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story