ஈரோடு பஸ் நிலையம் தற்காலிக மார்க்கெட்டில் குவிந்த மக்கள்; நெருக்கியடித்துக்கொண்டு வந்ததால் பரபரப்பு


ஈரோடு பஸ் நிலையம் தற்காலிக மார்க்கெட்டில் குவிந்த மக்கள்; நெருக்கியடித்துக்கொண்டு வந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 1 April 2020 5:15 AM IST (Updated: 1 April 2020 4:09 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு பஸ் நிலையம் தற்காலிக மார்க்கெட்டில் குவிந்த மக்கள் நெருக்கியடித்துக்கொண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு, 

ஈரோடு நேதாஜி காய்கறி மற்றும் பழங்கள் மார்க்கெட் தற்காலிகமாக ஈரோடு பஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டு உள்ளது. நேதாஜி மார்க்கெட் பகுதி நெரிசலாகவும், பொதுமக்கள் சமூக விலகலை கடைபிடிக்க போதிய வசதி இல்லாமல் இருப்பதாலும் இந்த மாற்றம் செய்யப்பட்டது. மாவட்ட கலெக்டர் சி.கதிரவன், போலீஸ் சூப்பிரண்டு எஸ்.சக்திகணேசன், மாநகராட்சி ஆணையாளர் எம்.இளங்கோவன், ஆர்.டி.ஓ. முருகேசன் என்று அனைத்து அதிகாரிகளும் உரிய ஆலோசனை செய்து இந்த முடிவினை எடுத்தனர்.

பொதுமக்கள் காய்கறி மற்றும் பழங்கள் வாங்குவதில் தடை இருக்கக்கூடாது. அவர்களுக்கு நெரிசலால் கொரோனா தொற்று ஏற்பட்டு விடக்கூடாது என்று இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதுமட்டுமின்றி, சமூக விலகலுக்கான இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் வட்டங்கள் போடப்பட்டன. பஸ் நிலையம் அனைத்து தரப்பு மக்களும் வந்து செல்ல வசதியாக இருப்பதால், இந்த மாற்றம் மக்களிடம் வரவேற்பை பெற்றது.

தினசரி ஏராளமானவர்கள் தற்காலிக சந்தைக்கு வந்து பொருட்கள் வாங்கிச்சென்று வருகிறார்கள். இந்தநிலையில் நேற்று காலை வழக்கம்போல சந்தை கூடியது. கடந்த ஓரிரு நாட்களாக சமூக விலகல் கடைபிடிக்கப்பட்ட நிலையில், நேற்று அந்த இடைவெளியை விட்டு பொதுமக்கள் வெளியே வந்து நெருக்கியடித்துக்கொண்டு பொருட்களை வாங்கினார்கள். இதுபற்றி பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பலமுறை வேண்டுகோள் விடுத்தும் பொதுமக்கள் கண்டுகொள்ளாமல் இருந்தது வேதனைக்கு உரியது.

கடந்த 24-ந் தேதி முதல் தொடர் ஊரடங்கு நடவடிக்கையில் பாதுகாப்பாக இருக்கும் மக்கள் எஞ்சிய காலத்தையும் முறையாக தனித்திருத்தல் மூலம் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ளலாம். இத்தகையை ஒரு நல்ல முடிவு வேண்டும் என்றே அரசும் அதிகாரிகளும் பாடுபட்டு வருகிறார்கள். தினமும் மக்கள் தேவை அறிந்து ஒவ்வொரு வசதிகளாக கொடுத்து வருகிறார்கள். எனவே இதை சரியாக பயன்படுத்த வேண்டியது மக்களின் கடமை. அதைவிட்டு விட்டு ஒருவருக்கு ஒருவர் போட்டிப்போட்டுக்கொண்டு நெருங்கிக்கொண்டு வந்தால், அரசின் நோக்கம் சிதைவது மட்டுமின்றி, நோய்த்தொற்று வர நாமே காரணமாகி விடுவோம் என்று சமூக ஆர்வலர்களும் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

ஒவ்வொரு நேரமும் தனித்தனியாக மக்களை கண்காணிப்பது என்பது இயலாது. எனவே பொதுமக்கள் தற்போதைய காலக்கட்டத்தின் முக்கியத்துவம் மற்றும் அவசர நிலை கருதி தனித்திருத்தல் அல்லது தனிமைப்படுத்தலை மேற்கொள்ள வேண்டும். அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே வரும்போது சமூக விலகலுக்கான ஒரு மீட்டர் இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

தற்காலிக சந்தையை எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோர் நேற்று பார்வையிட்டனர். வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான கூடுதல் வசதிகளை செய்து தருவதாக கூறிய அவர்கள், சமூக விலகலை கடைபிடித்து கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் ஒவ்வொருவரும் தங்களை தற்காத்துக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.

Next Story