மாநிலம் முழுவதும் 302 பேரை கொரோனா தாக்கியது மும்பை, தானேயில் 187 பேருக்கு பாதிப்பு - தடுப்பு பணியில் அரசு தீவிரம்


மாநிலம் முழுவதும் 302 பேரை கொரோனா தாக்கியது மும்பை, தானேயில் 187 பேருக்கு பாதிப்பு - தடுப்பு பணியில் அரசு தீவிரம்
x
தினத்தந்தி 1 April 2020 5:30 AM IST (Updated: 1 April 2020 4:55 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் 302 பேரை கொடிய கொரோனா தாக்கி இருப்பதாகவும், மும்பை, தானேயில் மட்டும் 187 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பதாகவும் அரசு தெரிவித்து உள்ளது. இதையடுத்து நோய் தடுப்பு பணியில் மாநில அரசு தீவிரம் காட்டி உள்ளது.

மும்பை,

மராட்டியத்தில் ஆட்கொல்லி கொரோனா வைரஸ்மின்னல் வேகத்தில்பரவி வருகிறது.

மாநில தலைநகரான மும்பையில் இந்த கொடிய கொரோனா பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமின்றி மும்பை புறநகர் பகுதிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.

மேலும் புனே, சாங்கிலி மாவட்டமும் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கிறது. கொரோனாவை தடுக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தபோதிலும், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது.

இந்த நிலையில் மராட்டியத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை விவரத்தை மாநில அரசு நேற்று இரவு வெளியிட்டது. அதன்படி மாநிலம் முழுவதும் 302 பேரை கொரோனா தாக்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மும்பை, தானே

இதில் மும்பையில் 151 பேரும், தானேயில் 36 பேரும் என மும்பை பெருநகர பகுதியில் 187 பேர் கொரோனாவின் கோர கரங்களில் சிக்கி உள்ளனர்.

அடுத்தபடியாக புனே நகர் மற்றும் புறநகரங்களில் 48 பேருக்கும், சாங்கிலியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 25 பேருக்கும் இந்த கொடிய நோய் பரவி உள்ளது. நாக்பூரில் 16 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதுதவிர அகமத்நகர், யவத்மால், புல்தானா, சத்தாரா, கோலாப்பூர், ரத்னகிரி, சிந்த்துர்க், கோண்டியா, ஜல்காவ், நாசிக் ஆகியவையும் கொரோனா பாதித்த மாவட்டங்களாக கண்டறியப்பட்டு உள்ளன.

இதில் மும்பையில் நேற்று ஒரே நாளில் 59 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டதாக அரசு கூறியபோதிலும், இதில் கடந்த 4 நாட்களில் விடுபட்டவர்கள் எண்ணிக்கை சேர்க்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சற்று ஆறுதல் தரும் செய்தியாக இதுவரை 39 கொரோனா நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பி இருப்பதாக சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபோ கூறினார்.

தீவிர நடவடிக்கை

இதற்கிடையே கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியுடன் தீவிர ஆலோசனை நடத்தினார்.

கொரோனா அறிகுறி உள்ளவர்களை கண்டறியும் பணியை தீவிரப்படுத்தவும், அவர்களை தனிமைப்படுத்த மும்பையில் காலியாக உள்ள கட்டிடங்களை பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

சிறப்பு அதிகாரிகள் நியமனம்

மும்பையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மும்பை மெட்ரோ ரெயில் கழக முன்னாள் நிர்வாக இயக்குனர் அஸ்வினி பிடே, மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி டாக்டர் என். ராமசாமி ஆகியோர் சிறப்பு அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில் அஸ்வினி பிடே மும்பை மாநகராட்சி கொரோனா தடுப்பு கட்டுபாட்டு அறை ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார்.

இதேபோல மும்பையில் கொரோனாவால் அதிகம் பாதித்த பகுதிகளை புவியியல் தகவல் முறையை (ஜி.ஐ.எஸ்.) பயன்படுத்தி கண்காணிக்க மாநகராட்சி தொடங்கி உள்ளது.

Next Story