முதல்-மந்திரியின் நிவாரண நிதிக்கு நடிகர் புனித் ராஜ்குமார் ரூ.50 லட்சம் நன்கொடை - எடியூரப்பாவிடம் நேரில் வழங்கினார்
முதல்-மந்திரியின் நிவாரண நிதிக்கு நடிகர் புனித் ராஜ்குமார் ரூ.50 லட்சம் நன்கொடை வழங்கினார்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த தடுப்பு பணிகளுக்கு தொழில் நிறுவனங்கள், பொதுமக்கள் தாராளமாக நன்கொடை வழங்க வேண்டும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா வேண்டுகோள் விடுத்தார். இந்த நிலையில் பல்வேறு நிறுவனங்கள் முதல்-மந்திரியின் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கி வருகின்றன. இதுகுறித்து மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கொரோனாவை தடுக்கும் பணியில் மாநில அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த பணிக்கு பல்வேறு தனியார் நிறுவனங்கள் உதவ முன்வந்துள்ளன. முதல்-மந்திரியின் நிவாரண நிதிக்கு கன்னட திரைப்பட நடிகர் புனித் ராஜ்குமார் ரூ.50 லட்சம் வழங்கியுள்ளார்.
ஏசியன் பெயிண்ட் நிறுவனம் ரூ.2 கோடி, டோயோடா இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ரூ.31 லட்சம், ஜியோமி டெக்னாலஜிஸ், ஜே.எம். பினான்சியல் ஆகிய நிறுவனங்கள் தலா ரூ.25 லட்சம், டோயோடா கிர்லோஸ்கர் ரூ.23 லட்சம், கென்னமெடல்ஸ் நிறுவனம் ரூ.15 லட்சம், பிரிகேட் என்டர்பிரைசஸ் ரூ.10 லட்சம் வழங்கியுள்ளன.
சாம்சங் நிறுவனம் ரூ.1 கோடி மதிப்பீட்டில் கொரோனா பரிசோதனை கருவிகளை கொள்முதல் செய்வதாக உறுதியளித்துள்ளது. டோயோடா கிர்லோஸ்கர் நிறுவனம் டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் பயன்படுத்தும் முழு உடல் கவச உடைகளை வழங்குவதாக உறுதி அளித்துள்ளது. மேலும் அந்த நிறுவனம் ராமநகரில் 1,200 ஏழை குடும்பங்களுக்கு உணவு வழங்குவதாகவும் கூறியுள்ளது.
ஈமர்சிங்கா செய்டு நிறுவனம் ரூ.10 கோடி மதிப்பீட்டிலான போர்வைகள், தலையணைகள், துண்டுகளை வழங்க ஒப்புக் கொண்டுள்ளது. இன்னும் பல தனியார் நிறுவனங்கள், பல்வேறு பொருட்களை வழங்க முன்வந்துள்ளன.
இவ்வாறு கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story