கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், பணியாளர்களுக்கு மருத்துவ காப்பீடு செய்ய வேண்டும் - டி.கே.சிவக்குமார் வலியுறுத்தல்


கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், பணியாளர்களுக்கு மருத்துவ காப்பீடு செய்ய வேண்டும் - டி.கே.சிவக்குமார் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 1 April 2020 5:15 AM IST (Updated: 1 April 2020 5:04 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், பணியாளர்களுக்கு மருத்துவ காப்பீடு செய்ய வேண்டும் என்று கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

பெங்களூரு, 

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா தடுப்பு தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் செயல்படையின் கூட்டம் எனது(டி.கே.சிவக்குமார்) தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட-தாலுகா தலைநகரங்களில் கொரோனா பரிசோதனை கூடத்தை திறக்க வேண்டும். கொரோனா அறிகுறி உள்ள அனைவருக்கும் அரசு இலவசமாக பரிசோதனை செய்ய வேண்டும். கொரோனா சிகிச்சைக்கு தயார்படுத்தியுள்ள மருத்துவமனைகளுக்கு தேவையான செயற்கை சுவாச கருவிகளை அரசு உடனே வழங்க வேண்டும்.

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு மருத்துவ காப்பீடு செய்ய வேண்டும். அவர்களுக்கு தேவையான முகக்கவசங்கள், முழு உடல் பாதுகாப்பு கவசங்கள், சானிடைசர் திரவம் உள்ளிட்டவற்றை போதுமான அளவுக்கு வழங்க வேண்டும். ஊரடங்கு உத்தரவால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கிறார்கள். அவர்களுக்கு உணவு பொருட்கள் கிடைப்பதில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்.

அனைத்து வகையான வங்கி கடன்களுக்கும் மாத தவணையை செலுத்துவதில் சில குழப்பங்கள் எழுந்துள்ளன. இதற்கு அந்த அதிகாரிகளுடன் முதல்-மந்திரி பேசி தீர்வு காண வேண்டும். இந்த நோயை கட்டுப்படுத்துவது தொடர்பாக மத்திய-மாநில அரசுகள் பிறப்பிக்கும் உத்தரவுகளை பின்பற்றுமாறு மக்களிடையே காங்கிரசார் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Next Story