கொரோனா தடுப்பு குறித்து மேல்விஷாரம் பகுதியில் கலெக்டர் ஆய்வு
மேல்விஷாரம் பகுதியில் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன், உதவி கலெக்டர் இளம்பகவத் ஆகியோர் கொரோனா தடுப்பு குறித்து ஆய்வு செய்தனர்.
ஆற்காடு,
ராணிப்பேட்டை மாவட்டம், மேல்விஷாரம் பகுதியைச் சேர்ந்த 26 வயது வாலிபருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன், உதவி கலெக்டர் இளம்பகவத் ஆகியோர் மேல்விஷாரம் பகுதிக்குச் சென்று சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று காய்கறி மார்க்கெட் மற்றும் மளிகை கடைகள், நடைபாதை கடைகள் ஆகியவற்றை ஒரு மீட்டர் இடைவெளி விட்டு அமைப்பது குறித்தும் மற்றும் சுகாதாரப் பணிகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.
மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறையினருக்கு அறிவுரை வழங்கினர். மேல்விஷாரம் நகராட்சி ஆணையாளர் திருமலை செல்வம், முன்னாள் நகரசபை துணைத்தலைவர் இப்ராகிம் கலிலுல்லா உடனிருந்தனர்.
அதேபோல் வேப்பூர் எல்லைக்குட்பட்ட மைதானத்தில் தங்கியுள்ள வெளியூர்களைச் சேர்ந்த தினக்கூலி தொழிலாளர்களுக்கு உணவு வழங்கிக் கொண்டிருந்த செஞ்சிலுவை சங்க மாவட்ட தலைவர் சரவணன், தன்னார்வலர் கண்ணன், கே.பாஸ்கரன் மற்றும் தன்னார்வலர்களிடம் உணவின் தரம் குறித்து கேட்டறிந்து, கூட்டம் கூடாமல் தனித் தனியாக நின்று வாங்கி செல்லும் படி அறிவுறுத்தினார்கள். பின்னர் ஆற்காட்டில் உள்ள அண்ணா சிலை பகுதி மற்றும் பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் அமைக்கப்படும் காய்கறி கடைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.
Related Tags :
Next Story