திருப்பத்தூர் மாவட்டத்தில், கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு 1,000 படுக்கை வசதி - கலெக்டர் சிவன்அருள் பேட்டி


திருப்பத்தூர் மாவட்டத்தில், கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு 1,000 படுக்கை வசதி - கலெக்டர் சிவன்அருள் பேட்டி
x
தினத்தந்தி 31 March 2020 10:00 PM GMT (Updated: 1 April 2020 3:53 AM GMT)

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக 1000 படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் சிவன்அருள் தெரிவித்தார்.

வாணியம்பாடி, 

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக வாணியம்பாடி பைபாஸ் சாலையில் உள்ள இஸ்லாமிய பெண்கள் கல்லூரியில் 130 படுக்கை வசதிகள் கொண்ட வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவன்அருள் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை மாவட்டம் முழுவதும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மருத்துவமனை வசதிக்காக அனைத்து நடவடிக்கைகளும் துரிதமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது வாணியம்பாடியில் உள்ள இந்தக் கல்லூரியில் 130 படுக்கைகள் கொண்ட வார்டு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதேபோல் நாட்டறம்பள்ளி அருகே அக்ராவரம் என்ற இடத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 100 படுக்கைகளும், திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் 100 படுக்கை வசதிகளும் ஏற்படுத்தி உள்ளோம்.

இந்த மாவட்டத்தில் இருந்து டெல்லியில் நடந்த ஒரு மாநாட்டிற்கு சென்று திரும்பிய 36 பேரில் 22 பேர் ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர் அரசு மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களுடைய ரத்த மாதிரி பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மாவட்டம் முழுவதும் இதுவரையில் 818 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் குறித்த விவரங்களை, விமான நிலைய அதிகாரிகளிடம் பெற்றுள்ளோம். அவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

திருமணம், இறப்பு, மருத்துவம் உள்ளிட்ட பணிகளுக்காக வெளி மாவட்டங்களுக்கு செல்பவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் தொடர்பு கொண்டு அனுமதி பெற்று செல்லலாம். இதுவும் மிகவும் குறைந்த அளவிலேயே அனுமதிக்கப்படும். தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

யாருக்காவது போதிய உணவு வசதி இல்லை என்றால் தகவல் மையத்தை 0417- 222 111 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். இதுவரையில் வாணியம்பாடி, ஆம்பூர் அரசு மருத்துவமனைகளில் தலா 50 படுக்கைகள், நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் 85, ஆம்பூர் அரபிக் கல்லூரியில் 200, டிரேட் சென்டரில் 100 படுக்கைகள் என மாவட்டத்தில் 1000 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்திரி சுப்பிரமணி, தாசில்தார் சிவப்பிரகாசம், நகராட்சி ஆணையாளர் சிசில் தாமஸ், கிராம நிர்வாக அலுவலர் சற்குணம் உள்பட பலர் உடனிருந்தனர்.

Next Story