கடைகள் மதியம் 2.30 மணிக்கு அடைப்பு: மளிகை பொருட்களை வரிசையில் நின்று வாங்கி சென்ற மக்கள்


கடைகள் மதியம் 2.30 மணிக்கு அடைப்பு: மளிகை பொருட்களை வரிசையில் நின்று வாங்கி சென்ற மக்கள்
x
தினத்தந்தி 1 April 2020 10:36 AM IST (Updated: 1 April 2020 10:36 AM IST)
t-max-icont-min-icon

கடைகள் மதியம் 2.30 மணிக்கு அடைக்கப்படுவதால் கரூரில் மளிகை பொருட்களை பொதுமக்கள் வரிசையில் நின்று வாங்கி சென்றனர்.

கரூர்,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு, 144 தடை உத்தரவினை பிறப்பித்துள்ளது. அத்தியாவசிய பொருட் கள் தட்டுப்பாடு இன்றி கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனாலும் மளிகை கடை, காய்கறி கடைகளில் கூட்டம் அலைமோதியது.

இதனை கட்டுப்படுத்த மளிகை, காய்கறி விற்பனை கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2.30 வரை தான் திறக்கப்பட வேண்டும், மருந்தகங்கள், உணவகங்களுக்கு (பார்சலில் உணவு) நேர கட்டுப்பாடு இல்லை என்கிற அரசு உத்தரவு கடந்த 29-ந்தேதியிலிருந்து தமிழகத்தில் அமலில் உள்ளது. இந்த நிலையில் நேற்று காலை கரூரில் திருவள்ளுவர் மைதானம் அருகே பழைய பைபாஸ் ரோடு, வெங்கமேடு, திருமாநிலையூர், ராயனூர் உள்ளிட்ட இடங்களில் மளிகை பொருட்கள் வாங்க மக்கள் பலர் வந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் இடைவெளி விட்டு நின்று பொருட்கள் வாங்கி சென்றனர்.

கரூர் காமாட்சியம்மன் கோவில் கரூர் பஸ் நிலையம் அருகே உள்ள மருந்தகங்களிலும் கூட்டம் அதிகளவில் இருந்தது. போலீசார் விழிப்புணர்வு வேனில் ரோந்து சென்று இடைவெளிட்டு நின்று மருந்து வாங்கி செல்லுமாறு மக்களிடம் ஒலிபெருக்கியில் அறிவுறுத்தினர். கரூர் மாரியம்மன் கோவில் அருகேயுள்ள நாட்டு மருந்து கடைகளிலும் மருந்து வாங்க அதிகளவிலான மக்கள் சென்றனர். தேவை இல்லாமல் வாகனங்களில் வந்தவர்களை போலீசார் எச்சரித்து வீடுகளுக்கு திருப்பி அனுப்பினர்.

கரூர் பஸ் நிலைய காய்கறி கடைகளுக்கு வருவோர் கைகழுவிவிட்டு வரும் வகையில் அங்கு தற்காலிக தொட்டி வைக்கப்பட்டிருந்தது. பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த பொது விலை பட்டியலை மக்கள் பார்வையிட்டு காய்கறிகளை வாங்கி சென்றனர். கரூரில் வங்கிகள், ஏ.டி.எம்.கள் வழக்கம் போல் செயல்பட்டன. வங்கிக்கு பணம் செலுத்துவது, எடுப்பது போன்ற பரிவர்த்தனைக்காக வந்தவர்கள் வாசலிலேயே தடுத்து நிறுத்தி ஒவ்வொருவராக கிருமிநாசினியால் கையை கழுவிய பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். கரூர் மனோகரா கார்னர் அருகேயுள்ள ஒரு வங்கியில் பாதுகாவலர் துப்பாக்கியுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். எனினும் வங்கிக்கு வருபவர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட குறைவாகவே இருந்தது.

Next Story