பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்கும் வகையில் ரூ.100-க்கு காய்கறி தொகுப்பு விற்பனை


பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்கும் வகையில் ரூ.100-க்கு காய்கறி தொகுப்பு விற்பனை
x
தினத்தந்தி 1 April 2020 5:06 AM GMT (Updated: 1 April 2020 5:06 AM GMT)

பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்கும் வகையில் ரூ.100-க்கு காய்கறி தொகுப்பு புதுக்கோட்டை நகராட்சி வீதிகளில் விற்பனை செய்யும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.

புதுக்கோட்டை,

பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்கும் வகையில் கூட்டுறவுத்துறையின் மூலம் ரூ.100 மதிப்புடைய காய்கறிகள் அடங்கிய தொகுப்பினை வீதிகளில் சென்று விற்பனை செய்யும் பணி புதுக்கோட்டை நகராட்சி பகுதியில் நேற்று முதல் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த பணியினை கலெக்டர் உமா மகேஸ்வரி நேரில் ஆய்வு செய்து, ஆலோசனைகளை வழங்கினார்.

காய்கறிகள் அடங்கிய தொகுப்பினை வீதிகளில் சென்று விற்பனை செய்யும் பணி கூட்டுறவுத்துறையின் சார்பில் நடமாடும் வாகனத்தின் மூலம் வெங்காயம், தக்காளி, 2 வகை காய்கறிகள், தேங்காய், துவரம்பருப்பு, உளுந்தம்பருப்பு, மிளகு, சீரகம், வெந்தயம் உள்ளிட்ட 9 வகையான காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் ரூ.100-க்கு வழங்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து கலெக்டர் உமா மகேஸ்வரி நிருபர்களிடம் கூறுகையில், பொதுமக்கள் காய்கறிகள் வாங்கும் பொழுது கட்டாயம் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும். இதேபோல் வாகனங்களில் விற்பனை செய்ய வரும் கூட்டுறவுத்துறை பணியாளர்களும் தேவையான பாதுகாப்பு உபகரணங்களுடன் பொதுமக்களுக்கு காய்கறிகளை விற்பனை செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதுதவிர உழவர்சந்தையில் கூட்டம் சேராத வகையில் ரூ.150-க்கு கத்தரி, வெண்டைக்காய், முள்ளங்கி, வாழை, கீரை, தக்காளி, சின்னவெங்காயம், பெரியவெங்காயம், உருளை, எலுமிச்சை, கருவேப்பிலை, கொத்தமல்லி, பச்சைமிளகாய் உள்ளிட்ட 13 வகையான காய்கறிகள் அடங்கிய தொகுப்பு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் இருக்கும் இடங்களுக்கே சென்று காய்கறி வழங்கப்படுவதால் தேவையின்றி பொது இடங்களுக்கு செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றார். இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அதிகாரி சரவணன், கூட்டுறவுத்துறை மண்டல இணை பதிவாளர் உமா மகேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து கலெக்டர் புதுக்கோட்டை அருகே உள்ள கேப்பரை பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்ற வருகைபுரிந்த பீகார் மாநில தொழிலாளர்களை நேரில் சந்தித்து, அவர்களுக்கு வழங்கப்பட்டு உள்ள அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

அப்போது அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உணவு, இருப்பிடம், மருத்துவ வசதி போன்றவை குறித்தும் கேட்டறிந்தார். தொடர்ந்து கலெக்டர் உமா மகேஸ்வரி புதுக்கோட்டை வடக்கு 3-ம் வீதியில் உள்ள முதியோர் இல்லத்திற்கு சென்று, அங்குள்ள முதியவர்களுக்கு நிலவேம்பு கசாயம், பழங்கள் மற்றும் முக கவசங்கள் உள்ளிட்டவற்றை வழங்கி, கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

Next Story