தஞ்சையில், பாரில் மறைத்து வைத்திருந்த ரூ.1 லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல் - முதியவர் கைது
தஞ்சையில், பாரில் மறைத்து வைத்திருந்த ரூ.1 லட்சம் மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து முதியவரை கைது செய்தனர்.
தஞ்சாவூர்,
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகளை தவிர பிற கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகள், பார்களும் அடைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தஞ்சை மாநகரில் பல இடங்களில் 3 மடங்கு கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்குப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயசீலன், இன்ஸ்பெக்டர் ஹேமாவதி, சப்-இன்ஸ்பெக்டர்கள் கோவிந்தராஜன், சேகர் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். தஞ்சை வடக்குவாசல் அருகே உள்ள ஒரு பாரில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. இதையடுத்து நேற்று மதுவிலக்குப்பிரிவு போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர்.
அப்போது பாரில் மறைத்து வைத்திருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், மது விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த அப்துல்காதர்(வயது 70) என்பவரை கைது செய்தனர். மொத்தம் 708 குவாட்டர் பாட்டில்களும், 150 பீர் பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் ஆகும்.
மேலும் பார் உரிமையாளர் சுந்தர், டாஸ்மாக் கடை கண்காணிப்பாளர் சம்பத்குமார், கட்டிட உரிமையாளர் பாலா ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story