டெல்லி சென்று திரும்பிய விழுப்புரத்தை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா பாதிப்பு - தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை
டெல்லி சென்று திரும்பிய விழுப்புரத்தை சேர்ந்த 3 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் 3 பேரும் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விழுப்புரம்,
டெல்லி நிஜாமுதீனில் நடைபெற்ற மாநாட்டில் இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளை சேர்ந்த முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பினர்.
இந்த நிலையில் அந்த மாநாட்டில் கலந்து கொண்ட பலருக்கு கொரோனா வைரஸ் தாக்கி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மாநாட்டில் கலந்து கொண்டவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வந்தது. அந்த வகையில் விழுப்புரம் நகரின் 6, 7, 8-வது வார்டுகளுக்குட்பட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 17 பேர் டெல்லிக்கு சென்றிருந்த நிலையில் அவர்களில் 6 பேர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு விழுப்புரம் திரும்பி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து நேற்று முன்தினம் நகராட்சி அதிகாரிகள் போலீசாரின் துணையுடன் அவர்கள் 6 பேரின் வீட்டிற்கும் சென்று அவர்களை மீட்டு உடனடியாக விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து, அவர்களுக்கு கொரோனா வைரஸ் இருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் 6 பேருடைய ரத்த மாதிரிகளையும் மருத்துவ குழுவினர் சேகரித்து அதனை சென்னை கிண்டியில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
இவர்களில் விழுப்புரம் முத்தோப்பு அகரம்பாட்டையை சேர்ந்த 56 வயதுடைய ஒருவர், விழுப்புரம் கமலா நகரை சேர்ந்த 50 வயதுடைய ஒருவர், விழுப்புரம் திடீர் குப்பம் வாசுகி நகரை சேர்ந்த 51 வயதுடைய ஒருவர் ஆகிய 3 பேரின் மருத்துவ பரிசோதனை அறிக்கைகள் நேற்று முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கிடைக்கப்பெற்றது.
இதில் அவர்கள் 3 பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இவர்கள் 3 பேரையும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதித்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
அந்த வார்டில் அவர்கள் 3 பேரையும் தவிர வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை. குறிப்பிட்ட சில டாக்டர்கள், செவிலியர்கள் மட்டுமே தனி வார்டுக்கு சென்று 3 பேரையும் 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணித்து உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து அங்குள்ள டாக்டர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறுகையில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள 3 பேரையும் தனி வார்டில் அனுமதித்து அவர்களை தீவிரமாக கண்காணித்து உரிய சிகிச்சை அளித்து வருகிறோம். தற்போது 3 பேரும் நலமுடன் உள்ளனர். அவர்களுக்கு தேவையான சத்தான உணவு வழங்கப்பட்டு வருகிறது. 3 பேரும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து விலகி முழுமையாக குணமடைய தேவையான அனைத்து உயிர் காக்கும் சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றனர்.
Related Tags :
Next Story