குமரி மாவட்டத்தில் 5 பேருக்கு கொரோனா ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை


குமரி மாவட்டத்தில் 5 பேருக்கு கொரோனா ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 1 April 2020 6:13 AM GMT (Updated: 1 April 2020 6:13 AM GMT)

குமரியில் 5 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நாகர்கோவில்,

வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து குமரி திரும்பியவர்களில் சளி, காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரியின் சிறப்பு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. எவ்வித அறிகுறியும் இல்லாதவர்கள் அவரவர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

நேற்று முன்தினம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி சிறப்பு ஆஸ்பத்திரியில் கொரோனா அறிகுறியுடன் 8 பேரும், நள்ளிரவில் ஒருவரும் என 9 பேர் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களின் ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு நெல்லையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இவர்களில் குமரி மாவட்டத்தை சேர்ந்த 62 வயது, 53 வயது, 43 வயது, 34 வயது உடைய 4 ஆண்கள் டெல்லியில் நடந்த மத கருத்தரங்கு மாநாட்டில் பங்கேற்று கடந்த 24-ந் தேதி திரும்பியவர்கள். சென்னையில் இருந்து வந்த 36 வயது உடையவர், இந்தோனேசியாவில் இருந்து வந்த மற்றொருவரும் அடங்குவர்.

டெல்லியில் நடந்த மத கருத்தரங்கு மாநாட்டில் தமிழகத்தில் இருந்து பங்கேற்று திரும்பிய பெரும்பாலானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருப்பதாலும், அவர்களில் சிலருக்கு பாதிப்பு அதிகமாகி சிகிச்சை பலன் இன்றி இறந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனால் டெல்லி மாநாட்டில் பங்கேற்று குமரி திரும்பிய 4 பேரும் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியின் சிறப்பு மருத்துவமனையில் மாடியில் உள்ள தனித்தனி அறைகளில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவர்களுடன் இந்தோனேசியாவில் இருந்தும், சென்னையில் இருந்தும் திரும்பிய 2 பேரும் தனி அறையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பரிசோதனை முடிவில் டெல்லி மத கருத்தரங்கில் பங்கேற்ற 4 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் சென்னையில் இருந்து வந்த வாலிபரும் கொரோனா பாதிப்புக்குள்ளானது தெரியவந்தது. சென்னையில் இருந்து வந்த அவர் நாகர்கோவில் அருகே மணிகட்டி பொட்டல் பகுதியில் உள்ள வீட்டில் தங்கி வந்தார். அவருக்கு தொடர்ந்து காய்ச்சல் இருந்து வந்த நிலையில் பரிசோதனை முடிவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் மணிகட்டி பொட்டல் பகுதிக்கும் ‘சீல்‘ வைத்து தனிமைப்படுத்தும் நடவடிக்கையை அதிகாரிகள் எடுத்துள்ளனர். இந்தோனேஷியாவில் இருந்து வந்தவருக்கான பரிசோதனை முடிவு வரவில்லை.

தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இருந்த போது, குமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று இல்லாமல் இருந்தது. இந்தநிலையில் நேற்று முதன் முறையாக கொரோனாவால் 5 பேர் குமரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் மாவட்ட மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது குமரி மாவட்டம் முழுவதும் 4 ஆயிரத்து 446 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மத கருத்தரங்கில் பங்கேற்ற 4 பேருக்கு தொற்று உறுதியானதால், அவர்களுடைய குடும்பத்தினர் மற்றும் தொடர்பில் இருந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story