புதுச்சேரி, பாகூரில் மதுபாட்டில் பதுக்கிய 5 பேர் கைது
புதுச்சேரியில் மது பாட்டில்களை வீட்டில் பதுக்கி அதிக விலைக்கு விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர். பாகூர் அருகே 3 பேர் பிடிபட்டனர்.
புதுச்சேரி,
புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வரும் நிலையில் வருகிற 14-ந்தேதி வரை மதுபானக் கடைகள் மூடப்படும் என அரசு அறிவித்துள்ளது. இந்தநிலையில் வீடுகளில் பதுக்கி வைத்து மது பானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சிறப்பு அதிரடிப்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது ஆட்டுப்பட்டியில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து வாட்ஸ்-அப் மூலம் வாடிக்கையாளர்களை வரவழைத்து அதிக விலைக்கு விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்தநிலையில் நேற்று காலை சாரம், கொசப்பாளையம் பகுதியில் ஒரு வீட்டில் மது பாட்டில்கள் விற்கப்படுவதாக தகவல் அறிந்து சிறப்பு அதிரடிப்படை சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் போலீசார் அந்த வீட்டை சோதனை போட்டனர். அப்போது அங்கு மது பாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து வீட்டில் வைத்து மதுபாட்டில் விற்ற சாரம் ராஜா அய்யர் தோட்டத்தை சேர்ந்த ஆனந்த் (வயது33), சாரம் சுதாகர் (38) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அங்கிருந்த ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
மதுபானக் கடைகள் மூடப்படும் என்று அரசு அறிவித்த நாளில் மது பாட்டில்களை மொத்தமாக வாங்கி வீட்டில் பதுக்கி வைத்து செல்போன் மூலம் வாடிக்கையாளர்களை வரவழைத்து விற்பனை செய்துள்ளனர்.
அதேபோல் சோரியாங்குப்பம் மதுக்கடை அருகில் பதுக்கி வைத்து அதிக விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதாக பாகூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு ரச்சனா சிங் தலைமையில் பாகூர் இன்ஸ்பெக்டர் அனில்குமார், சப் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், அதிரடிப்படை சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் குறிப்பிட்ட இடத்திற்கு விரைந்து சென்றனர். போலீசார் வருவதை கண்டு அப்பகுதியில் கூடி இருந்த மதுப்பிரியர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள்.
அங்கு நடத்திய விசாரணையில் சோரியாங்குப்பம் நடுத்தெருவைச் சேர்ந்த வைத்திலிங்கம் (30), முருகராஜ் (34), கடுவனூர் அய்யனார் கோவில் தெருவைச் சேர்ந்த மாயவன் (30) ஆகியோர் அதிக விலைக்கு விற்பதற்காக மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடமிருந்து 100க்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story