நெல்லை மேலப்பாளையத்தில் பரபரப்பு: கொரோனா நோயாளிகள் குடும்பத்தினர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர்


நெல்லை மேலப்பாளையத்தில் பரபரப்பு: கொரோனா நோயாளிகள் குடும்பத்தினர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர்
x
தினத்தந்தி 2 April 2020 4:15 AM IST (Updated: 2 April 2020 1:19 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மேலப்பாளையத்தில் கொரோனா நோயாளிகளின் குடும்பத்தினர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. சாலைகளை மூடி போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நெல்லை, 

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது. நெல்லை மேலப்பாளையம் பகுதியில் வெளிநாட்டில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் அதிகம் பேர் திரும்பி வருவதால் அந்த பகுதி தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் டெல்லியில் நடந்த மாநாட்டில் மேலப்பாளையத்தை சேர்ந்த 16 பேர் கலந்து கொண்டனர். அவர்களை மருத்துவ குழுவினர் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்த போது, அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அந்த 16 பேரின் குடும்பத்தினரை தனிமைப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டது. இதற்காக மேலப்பாளையத்தில் உள்ள ஒரு பள்ளிக்கூடம் தேர்வு செய்யப்பட்டது. அதற்கு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அந்த முடிவு கைவிடப்பட்டது.

இதனால் கொரோனா நோயாளிகளின் குடும்பத்தினர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டனர். அந்த பகுதியில் மாநகராட்சி ஊழியர்கள் நேற்று காலை கிருமி நாசினி தெளித்தனர்.

இதற்கிடையே மேலப்பாளையத்தை தனிமைப்படுத்தப்பட்ட மண்டலமாக நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா அறிவித்தார். இதனால் மேலப்பாளையம் ஊருக்குள் செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டன. தெற்கு புறவழிச்சாலையில் இருந்து அம்பை செல்லும் சாலை இரும்பு தடுப்பு வேலிகள் போடப்பட்டு மூடப்பட்டன.

அதேபோல் மேலப்பாளையம் குறிச்சி சாலை, கருங்குளம் சாலை, டவுன் சாலை ஆகியவைகளும் அடைக்கப்பட்டன. கயிற்றில் வேப்பிலை கட்டி பெரும்பாலான தெருக் கள் அடைக்கப்பட்டுள்ளன.

மேலப்பாளையம் பகுதியில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. அந்த ஊரைச் சுற்றிலும் இரும்பு தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. அந்த பகுதி தனித்தீவு போல காட்சி அளிக்கிறது. மேலப்பாளையத்தில் ஒரு சில இடங்களில் காய்கறிகள், மருந்து கடைகள், மளிகை கடைகள் திறந்து இருந்தன. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். அந்த பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு உதவியாக பேரிடர் மீட்பு குழுவினரும் களம் இறங்கி உள்ளனர். இதனால் மேலப்பாளையம் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டு வளையத்துக்குள் வந்தது.

Next Story