தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பாளர்கள் என நினைத்து வீடு, வீடாக சென்ற சுகாதார பணியாளர்களை முற்றுகையிட்ட பொதுமக்கள் - திருப்பூரில் பரபரப்பு


தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பாளர்கள் என நினைத்து வீடு, வீடாக சென்ற சுகாதார பணியாளர்களை முற்றுகையிட்ட பொதுமக்கள் - திருப்பூரில் பரபரப்பு
x
தினத்தந்தி 2 April 2020 4:45 AM IST (Updated: 2 April 2020 2:13 AM IST)
t-max-icont-min-icon

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பாளர்கள் என்று நினைத்து திருப்பூரில் வீடு, வீடாக சென்ற சுகாதார பணியாளர்களை முற்றுகையிட்ட பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர், 

திருப்பூர் மாநகராட்சி சுகாதார பிரிவு சார்பில் வீடு, வீடாக காய்ச்சல், சளியால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து கணக்கெடுப்பு பணி நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி சுகாதார பணியாளர்கள் வீடுதோறும் சென்று இந்த பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

மாநகர ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் 8 பேர் இந்த பணியில் ஈடுபட்டனர். அவர்கள் நேற்று மதியம் காங்கேயம் ரோடு பெரியதோட்டம் பகுதியில் வீடுதோறும் சென்று கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு விண்ணப்பங்களில் விவரங்களை பதிவு செய்தனர்.

இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு இவர்கள் விவரம் சேகரிப்பதாக நினைத்து ஒன்று திரண்டனர். பின்னர் சுகாதார பணியாளர்களை அவர்கள் முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர். இதைத்தொடர்ந்து சுகாதார பணியாளர்களை அங்குள்ள பள்ளி வாசலில் அமர வைத்ததாக தெரிகிறது. இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக சம்பவம் பற்றி அறிந்ததும் திருப்பூர் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் சுகாதார பணியாளர்களிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விவரம் கேட்டார்.

அவர்கள் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் வீடு, வீடாக சென்று மக்களிடம் வெளிமாநிலத்துக்கு சென்று விட்டு யாரும் வந்துள்ளார்களா? என்றும், சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் விவரம் சேகரிப்பதாகவும், அதற்கான படிவங்களை காண்பித்தும் விளக்கினார்கள். இது பற்றி அங்கிருந்த மக்களுக்கும் இந்த விவரம் அனைத்தும் விளக்கி கூறப்பட்டது. அதன்பின்னர் அங்கு திரண்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இதைத்தொடர்ந்து சுகாதார பணியாளர்கள் மீண்டும் வீடு, வீடாக சென்று மருத்துவ பரிசோதனை கணக்கெடுப்பை மேற்கொண்டனர்.

Next Story